கல்கி 2898 AD


நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் கல்கி 2898. அறிவியல் புனைவாக உருவாகி இருக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன் , தீபிகா படூகோன் , திஷா பதானி , கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் ஜூன் 27 ஆம் ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.


இந்நிலையில் கல்கி படத்தின் ப்ரோமோஷன்களுக்காக ஹைதராபாத்தில் ரசிகர்கள் , பத்திரிகையாளர்கள் கலந்துகொண்ட பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்று ஒருங்கிணைக்கப்பட்டது. இப்படத்தில் பிரபாஸ் பயன்படுத்திய அதிநவீன தொழில்நுட்பத்தால் உருவாக்கப் பட்ட புஜ்ஜி  என்கிற வாகனமும் மக்கள் பார்வைக்கு கொண்டுவரப்பட்டது. கூடுதலாக படத்தில் இருந்து புஜ்ஜி என்கிற இந்த வாகனத்தின் சிறப்பை காட்டும் வகையில் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடீயோவை பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போய் நின்றது தான் தற்போதைய நிலவரம்.


விமர்சனங்களை வாயடைக்கச் செய்த பிரபாஸ்


முன்னதாக பிரபாஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஆதிபுருஷ் படத்தின் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் சமூக வலைதளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு கல்கி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி அதையும் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்தனர். இதனால் இப்படத்திம் வி.எஃப்.எக்ஸ் காட்சிகளின் தரத்தைப் பற்றி நிறைய கேள்விகள் எழுந்தன.


600 கோடி ரூபாயில் உருவாகியிருக்கும் இப்படத்தில் பெரும்பங்கு வி.எஃப்.எக்ஸ் மற்றும் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கே செலவிடப் பட்டிருக்கும் நிலையில் அது ரசிகர்களை எந்த அளவிற்கு திருப்திபடுத்தும் என்கிற சந்தேகம் அனைவரது மனதிலும் இருந்தது. ஆனால் எந்த விதத்திலும் குறை சொல்லாத அளவிற்கு ஒவ்வொரு காட்சியையும் இரவுப் பகலால செதுக்கி வருகிறார்கள் படக்குழுவினர். இப்படியான நிலையில் தற்போது வெளியாகியுள்ள க்ளிம்ப்ஸ் வீடியோ இந்த சந்தேகத்திற்கு எல்லாம் பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு காட்சியும் ஹாலிவுட் படத்தின் தரத்திற்கு சற்றும் குறையாமல் பிரம்மாண்டமான ஒரு ஃபீலை கொடுக்கிறது இந்த வீடியோ. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் படத்தின் மீதான ஆர்வம் பலமடங்கு அதிகரித்திருப்பதாக பதிவிட்டு வருகிறார்கள்.






காட்சிகள் ஒருபக்கம் நம்மை வியக்கவைக்கும் நிலையில் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை ஒரு படி மேலே சென்று நம்மை ஆச்சரியப் படுத்துகிறது. சில காலமாக தமிழ் சினிமாவில் பெரியளவில் இசையமைக்காத சானா இப்படத்தில் பான் இந்திய அளவில் கெத்தான கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்