ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை சன் பிச்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன் நேரில் சந்தித்து செக் மற்றும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியுள்ளார்.
ஜெயிலர் வசூல் சாதனை
இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணியில் உருவான ஜெயிலர், கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான நிலையில், 600 கோடிகள் வசூலைக் கடந்து இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.
கோலிவுட்டின் மாபெரும் வெற்றிப் படமாக ஜெயிலர் உருவெடுத்துள்ள நிலையில், ரஜினிகாந்த் ரசிகர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயிலர் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸின் நிறுவனர் கலாநிதி மாறன், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்தி, பூங்கொத்து கொடுத்துள்ளார்.
செக் கொடுத்த கலாநிதி மாறன்
மேலும் ஜெயிலர் படத்தின் சம்பளத் தொகையையும் செக்காக கலாநிதி மாறன் ரஜினிகாந்திடம் வழங்கியுள்ளார். சன் பிச்சர்ஸ் நிறுவனம் இந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ள நிலையில், இந்தப் புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
ரஜினிகாந்தின் 169ஆவது படமாக வெளியான ஜெயிலர் திரைப்படம் வெளியாகி 21 நாள்கள் கடந்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்திய திரைப்படமான வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, சுனில், ரம்யா கிருஷ்ணன், விநாயகம், யோகி பாபு, வசந்த்ர ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
600 கோடிகளை நெருங்கும் வசூல்
முன்னதாக படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்புகளை எகிற வைத்த நிலையில், படம் வெளியாகி முதலில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனால் ரஜினியின் மாஸ் ஆக்ஷன் காட்சிகள் தியேட்டருக்கு சென்ற ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் 600 கோடிகள் வசூலை நெருங்கிக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. முன்னதாக ஜெயிலர் 525 கோடிகளை வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக சன் பிச்சர்ஸ் அறிவித்தது. தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 328 கோடிகள் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளைப் பகிரும் sacnilk தளம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இப்படம் 600 கோடிகள் வசூலைக் குவிக்குமா என எதிர்பார்த்து கோலிவுட் ரசிகர்கள் காத்துள்ளனர்.
மேலும் ரஜினிகாந்தின் 2.0 திரைப்படம் 615 கோடிகளுக்கு மேல் வசூலித்து அதிகம் வசூலித்த தமிழ் படமாக இதுவரை சாதனையைத் தக்க வைத்துள்ள நிலையில், இதனை ஜெயிலர் திரைப்படம் கடக்குமா என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.