தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் நடைபெற உள்ள ‘கலைஞர் 100’ விழாவுக்கு திரை நட்சத்திரங்களுக்கு அனைத்து சங்கங்களும் இணைந்து அழைப்பு விடுத்து வருகின்றன.
கலைஞர் 100 விழா
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதி நூற்றாண்டு விழா இந்த ஆண்டு முழுவதும் திமுக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தாண்டி தமிழ் திரையுலகம், எழுத்துலகம் எனக் கோலோச்சி பன்முகக் கலைஞராக மறைந்த முதலமைச்சர் மு.கருணாநிதி திகழ்ந்த நிலையில், இந்த நூற்றாண்டு விழாவினை ஒட்டி இதற்காக தனி இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், திரைத்துறையில் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் கலைஞர் 100 விழாவினை (Kalaignar 100) பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதல் பெறப்பட்டது.
ஒத்திவைக்கப்பட்ட விழா
முன்னதாக சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் 24.12.2023 அன்று இந்த விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. ஆனால் எதிர்பாராதவிதமாக சென்னையைத் தாக்கிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், இந்த விழா ஒத்திவைக்கப்பட்டது. மேலும் வரும் ஜனவரி 6ஆம் தேதி இந்த விழா நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் கலைஞர் 100 விழாவுக்காக நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கும் பணிகளை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தொடங்கியுள்ளது. ஆர்.கே.செல்வமணி, லிங்குசாமி, பேரரசு, ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்டோர் நேரில் சென்று திரைத்துறையினருக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
சரத்குமார் முதல் தனுஷ், நயன்தாரா வரை
அதன்படி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் திரைத்துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து, கலைஞர் 100 விழாவில் கலந்துகொள்ள பிரபலங்களான ஒய்.ஜி. மகேந்திரன், தனுஷ், நயன்தாரா, பாபி சிம்ஹா, ஹரீஷ் கல்யாண், சதீஷ், சரத்குமார், தம்பி ராமையா, சாய் பல்லவி, உமாபதி உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுவிட்ட நிலையில், மற்ற கலைஞர்களையும் தொடர்ந்து சந்தித்து அழைப்பு விடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.