மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு, திமுக பல சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. தமிழ்நாடு அரசு இதற்காக தனி இலச்சினை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரைத்துரையிலும் கொடு நாட்டி கோலோச்சியவர். இந்நிலையில் திரைத்துறையினர் சார்பிலும் ’கலைஞர் 100’ நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் ஜெட் வேகத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி சென்னையில் டிசம்பர் 24 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. இது மட்டும் இல்லாமல் விழாவையொட்டி டிசம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் படபிடிப்பு நடத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக இந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த நிகழ்ச்சி வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாணடமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல் நிகழ்ச்சி நடக்கும் ஜனவரி 6ஆம் தேதியும் அதற்கு முந்தைய நாளும் அதாவது ஜனவரி 5ஆம் தேதியும் படப்பிடிப்பு நடத்தப்படாது என பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர், இது குறித்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் திரைத்துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து கலைஞர் 100 என்ற மாபெரும் கலைஞர் நூற்றாண்டு விழா வருகிற 24.12.2023 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவித்து இருந்தோம்.
இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் மக்கள் சிரமங்களுக்கு ஆளாகி உள்ளார்கள்.
மேலும், முதலமைச்சரும் அரசு நிர்வாகமும் மக்களுக்கான நிவாரண பணிகளில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளார்கள். இவைகளைக் கருத்தில் கொண்டு 24.12.2023 அன்று நடைபெறவிருந்த கலைஞர் நூற்றாண்டு விழா 06.01.2024 சனிக்கிழமை அன்று மாலை நடைபெறும் என்று தெரிவித்து கொள்கிறோம்”. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் மீட்பு பணி காரணமாக சென்னையில் நடைபெற இருந்த கார் பந்தயமும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான ஃபார்முலா-4 சென்னையில் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு கொண்ட சாலையில் இரவு போட்டியாக இந்த கார் பந்தயம் நடத்தப்பட முடிவு செய்யப்பட்டது. தீவுத்திடலில் தொடங்கும் கார் பந்தயமானது அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடலை சென்றடைவது போல இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், புயல் காரணமாக கார் பந்தயம் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் காலவரையின்றி கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.