ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் “கலகத் தலைவன்”. இப்படம் உலகமெங்கும் நவம்பர் 18 ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் அண்மையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, கலகத் தலைவன் திரைப்பட இயக்குனர் மகிழ்திருமேனியிடம் அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் தாக்கி உள்ளீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த இயக்குனர், எந்த ஒரு குறிப்பிட்ட தனிப்பட்ட கட்சியையும் தாக்கவில்லை. எந்த ஒரு குறிப்பிட்ட கட்சியையும் குறி வைக்கவும் இல்லை. இது ஒரு பொதுவான அரசியல் நிகழ்வை தான் படம் கூறுகிறது. எல்லா அரசியல் கட்சிகளும், அவர்களுடைய நிதிகளின் மூலத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற கருத்தை தான் இந்த படம் வெளிப்படுத்துகிறது.
எந்த ஒரு அரசியல் கட்சியையும் மனதில் வைத்து எழுதவில்லை. எல்லா அரசியல் கட்சிகளையும் தான் இந்த படம் கேள்வி கேட்கிறது. எல்லா அரசியல் கட்சிகளின் நிதிகளின் மூலத்தில் எந்த ஒரு ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது என்பதை தான் இந்த படம் சொல்ல வருகிறது. மேற்கத்திய நாடுகளில் இது ஒரு சட்டமாகவே உள்ளது. முன்னேறிய நாடுகளில் அனைத்து அரசியல் கட்சிகளும், அவர்களுடைய நிதிகளின் மூலத்தை வெளிப்படையாக அறிவித்தே ஆக வேண்டும் என்ற ஒரு சட்டமே இருக்கிறது.
மேலும் வசனங்கள் ஒவ்வொன்றையும் உதயநிதி ஸ்டாலினிடம் படித்துக் காட்டி ஸ்கிரீன் பேப்பரை கையில் கொடுத்தேன். அவர் ஒரு முறை கூட இதை எதிர்க்கவும் இல்லை, மாற்றி எழுத சொல்லி கேட்கவும் இல்லை. முதலமைச்சர் ஸ்டாலினும் படத்தைப் பார்த்தார்.
அவரும் படம் பார்த்து விட்டு ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. உண்மையில், இதை எதிர்த்தது யார் என்று தெரியுமா ? சென்சார்தான் ! சென்சாரின் போது, வசனங்களையும் கூட லேசாக மாற்றினார்கள். இதை அவர்களது பணி என்றே நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.