நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியினர் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ளனர். ஊரெல்லாம் இதே பேச்சுதான் ஓடிக் கொண்டிருக்கிறது.


இந்நிலையில் நடன இயக்குநர் கலா மாஸ்டர், இது குறித்து ஒரு யூடியூப் சேனலுக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்துள்ளார். அதில் அவர், "நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். நயன்தாரா என் அன்புத் தங்கை. அவர் மிகவும் நல்லவர். எளிமையானவர். ஒரு லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் சாதாரண பெண் போல் நடந்து கொள்வார். பந்தா கிடையாது. பகட்டு கிடையாது. இளகிய மனம் கொண்டவர். அவர் விமான நிலையத்தில் தன்னுடன் செல்ஃபி கேட்பவர்களைக் கூட கூலாக ஹேண்டில் செய்வார். வாழ்க்கையில் நிறைய சோதனைகளைத் தாண்டி அவர் இந்த நிலையை அடைந்துள்ளார். அவரைப் போலவே விக்கியும் நல்ல மனம் கொண்டவர். இருவருமே தங்களிடம் பணிபுரிபவர்களை சொந்த சகோதர, சகோதரி போல் பார்த்துக் கொள்வார்கள். இது மாதிரியான நபர்களைப் பார்க்க முடியாது. அவர்கள் நல்ல மனதுக்கும், குணத்திற்கும் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளனர். நிச்சயம் நயன், விக்கி போலவே இருப்பார்கள். எனக்கு குழந்தைகளைப் பார்க்க ஆவல் உள்ளது. ஆனால் நான் இப்போது ஊரில் இல்லை. அதனால் விரைவில் பார்ப்பேன். மற்றபடி அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகள் குறித்து நான் எந்த விமர்சனமும் செய்ய விரும்பவில்லை. நயனுக்கு குழந்தைகள் என்றால் ரொம்பவே பிடிக்கும். அவர் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் அந்த சிறப்புக் குழந்தையை அவ்வளவு கேரிங்காக கவனித்துக் கொள்வார். அத்தனை பொறுமையாக குழந்தையை கையாள்வார்" என்று கூறியுள்ளார்.


முன்னதாக நேற்று மாலை, தங்களுக்கு குழந்தை பிறந்தது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், ”நயனும் நானும் பெற்றோர் ஆகிவிட்டோம். இரட்டை ஆண் குழந்தைகளுடன் நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம். எங்கள் பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து இரண்டு ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகளின் வடிவில் எங்களிடம் வந்துடைந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும்” எனப் பதிவிட்டிருந்தார்.


இன்ஸ்டாகிராமில் குழந்தைகளின் பிஞ்சு பாதங்கள் புகைப்படத்தைப் பகிர்ந்து ஐ லவ் யூ டூ அண்ட் ஐ லவ் யூ த்ரீ என்று பகிர்ந்திருந்தார்.






இந்நிலையில், நயன் - விக்னேஷ் சிவன் ஜோடி வாடகைத் தாய் மூலம் குழந்தைகளைப் பெற்றுள்ளதாகவும், செப்டம்பர் கடைசி வாரமே இவர்களுக்கு குழந்தைகள் பிறந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இச்சூழலில் நயன் - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கோலிவுட் திரைப்பிரபலங்களும், நெட்டிசன்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


கோலிவுட்டில் காதல் பறவைகளாக பல ஆண்டுகளாக உலா வந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த ஜூன் 9ஆம் கொண்டாட்டமாக திருமணம் செய்து கொண்டனர்.