தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். தென்னிந்திய சினிமாவின் உச்சபட்ச நட்சத்திரங்களான அஜித், விஜய், தனுஷ், விஷால், கார்த்தி, சூர்யா, ஜெயம்ரவி என அனைத்து முன்னணி நடிகர்களின் ஜோடியாக பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
சினிமா துறையிலும் ஜெயித்த அதே சமயம் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான ஒரு குடும்ப தலைவியாக இருந்து வரும் நடிகை காஜல் அகர்வாலின் 39 வது பிறந்தநாள் இன்று. அவருக்கு ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
2004ம் ஆண்டு இந்தியில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான 'க்யூன் ஹோ கயா நா' படத்தின் மூலம் சினிமா உலகிற்குள் அடியெடுத்து வைத்தவர் நடிகை காஜல் அகர்வால். அதை தொடர்ந்து தெலுங்கிலும் அறிமுகமானார். 2008ம் ஆண்டு வெளியான 'பழனி' திரைப்படத்தில் நடிகர் பரத் ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான காஜல் அகர்வாலுக்கு முதல் படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று தரவில்லை. இருப்பினும் தெலுங்கில் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் ராம் சரண் ஜோடியாக நடித்த 'மகதீரா' திரைப்படம் மிக பெரிய வெற்றி படமாக அமைந்து அவருக்கு சினிமா துறையில் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
கார்த்தியின் ஜோடியாக காஜல் நடித்த 'நான் மகான் அல்ல' படத்தில் தன்னுடைய க்யூட்டான நடிப்பால் ரசிகர்களை கவனத்தை ஈர்த்தார். அடுத்தடுத்து அவர் நடித்த துப்பாக்கி, மெர்சல், மாற்றான், மாரி,கோமாளி உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றன. அது காஜல் அகர்வாலின் கேரியர் கிராப்பையும் படு ஸ்பீடாக உயர்த்தியது.
சினிமாவில் உச்சப்பட்ச நடிகையாக வலம் வந்த சமயத்தில் திடீரென 2020ம் ஆண்டு தான் காதலித்து வந்த தொழிலதிபர் கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு கொஞ்ச காலம் சினிமாவில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு நீல் என்ற ஒரு மகன் இருக்கிறார். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் கடுமையாக உடற்பயிற்சி எல்லாம் மேற்கொண்டு ஃபிட்னெஸ் மெயின்டெய்ன் செய்து ஃபிட்டான ஒரு ஹீரோயினாக மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளார் காஜல் அகர்வால். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
ஒரு நடிகையாக, குடும்ப தலைவியாக, தாயாக, தொழில் அதிபராக பன்முக திறமையாளராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார் நடிகை காஜல் அகர்வால். அவருக்கு மேலும் பல வெற்றிகள் குவிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!