கைலாச அதிபராக கூறிக்கொள்ளும் நித்யானந்தா, சில விருதுகளை அறிவித்துள்ளார். விருதுகளோடு ஒவ்வொரு விருது பெறுவோருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்துள்ளார். இதோ அந்த பரிசுத் தொகை குறித்த விபரமும், அதை பெறுவதற்கான வழிமுறையும்... அது பற்றி நித்யானந்தா பேசிய பேச்சும்...




‛‛கைலாசவாசிகள் பேசிக்கொள்ளும் மொழியாக தமிழையும், வேற்று நாட்டவருடன் பேசிக்கொள்ள ஆங்கிலத்தையும், வேற்று கிரகத்தில் மற்றும் வேற்று மண்டலத்தில் வாழும் ரிஷி, முனிகளுடன் பேச சமஸ்கிருதத்தை கடைபிடிக்கிறோம். கைலாசா மும்மொழி கொள்கையை கடைபிடிக்கிறது. 


கைலாசவாசிகளாக மாற விரும்புவோர் தமிழ் கற்பது நன்மை தரும். ஏனென்றால், கைலாசத்தில் பேசிக்கொள்ள தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். எனவே அனைவரும் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள். ஒரு கோடி பேருக்கு பகவத்கீதை வழங்க உள்ளோம். ஏற்கனவே தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் பகவத் கீதை அச்சிடப்பட்டு, ஆசிரமங்களில் கிடைக்கிறது. அதை இலவசமாக பெறலாம்; இலவசமாக பிறருக்கு வழங்கலாம். 


கைலாச அன்னலட்சுமி விருது!


சேவையை ஊக்கப்படுத்தும் திட்டங்களை அப்டேட் ஆக்கி வெளியிடுகிறேன். சாதுர்மாஸி எனப்படும் இந்த நான்கு மாதங்களில், உலகமெங்கும் கடும் சிரமங்களுக்கு மத்தியில் அன்னதானம் செய்யும் நபர்களை கண்டறிந்து, அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வழங்கப்படும். எந்த நாட்டில் இருந்தாலும், அந்தந்த நாட்டின் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பண முடிப்பும், கைலாச அன்னலட்சுமி விருது வழங்கப்படும். பொதுமக்களும் இந்த விருதுக்கு தங்களுக்கு தெரிந்தவர்களை, எங்களது இமெயிலில் பரிந்துரை அனுப்பலாம். உலகம் முழுவதும் 1000 பேரை, கண்டறிந்து அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய், மற்றும் கைலாச அன்னலட்சுமி விருது வழங்கப்படும்.




‛அன்ன தாத்தா’ விருது!


விலைவாசி உச்சமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் ரூ.1 முதல் ரூ.10க்கு இட்லி, தோசை என குறைந்த விலைக்கு உணவுப்பொருட்கள் விற்பவர்கள் 1000 பேரை கண்டறிந்து, தலா ஒரு லட்சம் ரூபாயும், ‛அன்ன தாத்தா’ விருதும் வழங்கப்படும். குறைந்த விலைக்கு உணவு விற்பதும் ஒரு சேவை தான். 


நிறுவனங்கள், குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து அன்னதானம் வழங்குகிறார்கள். அவர்களுக்கு எந்த கமிஷனும், சேவை கட்டணம் இல்லாத நெட்வொர்க் சேவையை செய்யப் போகிறோம். 140 நாடுகளில் சட்டப்படியான அங்கீகரிக்கப்பட்ட கைலாசாவை உருவாக்கியிருக்கிறோம். இதில் பல நாடுகளில் ரிசிவராக மட்டும் இல்லாமல், ரிசிவர் ஏஜண்டாகவும் இருக்கும் அங்கீகாரம் பெற்றுள்ளது. நாங்கள் நன்கொடை வாங்குவது மட்டுமல்லாமல், பிறருக்கும் நன்கொடை வாங்கி கொடுக்கும் அங்கீகாரத்தை பெற்றுள்ளோம்.


இதை அன்னதானம் செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கும் நடவடிக்கையை எடுக்கப் போகிறோம். உதாரணத்திற்கு, சுவிட்சர்லாந்தில் இருந்து ஒருவர் காசிக்கு அன்னதானத்திற்கு நன்கொடை வழங்க விரும்பினால்; எங்கள் வழியாக அதை அனுப்பலாம். அதை பெறுவதற்கான சட்டரீதியான அனுமதியை அந்த நிறுவனமோ, அமைப்போ பெற்றிருக்க வேண்டும். கைலாசத்திற்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்பை, பிறருக்கும் உதவ பயன்படுத்த உள்ளோம். 


இந்து மதத்திற்காக உழைத்து உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு பொருளாதார உதவியும், விருதும் வழங்க உள்ளோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். 


கைலாச ஆச்சர்யா விருது!


தனி ஒரு குடும்பமாக இருந்து, வாழ்வாதாரத்திற்கு சிரமப்பட்டாலும், பாரம்பரிய பணியை தொடரும் கிராம கோயில்களில் பணியாற்றும் சிவாச்சரியர்கள், வைணவ ஆலயங்களில் உள்ள பட்டாச்சாரியர்கள், கிராம பூசாரிகள் என குறைந்தபட்சம் ஆயிரம் பேரை கண்டறிந்து கைலாச ‛ஆச்சார்ய விருது’ வழங்கப்படும். 


‛கைலாச ஞான சிரோன்மணி’ விருது


பல கிராமங்களில் தனி ஆளாக தேவராம், திருப்பாவை, திருவெண்பாவை, ராமாயணம், மகாபாரதம் கற்றுத்தருபவர்கள், நாடகம் மூலம் கொண்டு சேர்க்கும் நடிகர்களை கண்டறிந்து குறைந்த பட்சம் ஆயிரம் பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் மற்றும் ‛கைலாச ஞான சிரோன்மணி’ விருது வழங்கப்படும். 


கைலாச வேதவித்யாஷிகாமணி விருது!


தனி மனிதராக வறுமையைப் பற்றி கவலைப்படாமல் குழந்தைகளுக்கு வேதம் கற்றுத்தருபவர்கள் ஆயிரம் பேர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் மற்றும், ‛கைலாச வேதவித்யாஷிகாமணி’ விருதும் வழங்கப்படும். 


யூடியூப்பர்களுக்கு விருது!


யூடியூப் மூலம் இந்து மதம் சார்ந்த சேவையும் யூடியூப்பர்கள் 1008 பேரை அறிந்து, அவர்களுக்கும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தோடு, கைலாச விருது வழங்கப்படும். இதுவரை அறிவித்த வகையில், யாரை வேண்டுமானாலும் பொதுமக்கள் பரிந்துரை செய்யலாம். 


‛கைலாய வைத்யசிகாமணி’ விருது!


குறைந்த விலையில் வைத்தியம் பார்க்கும் மருத்துவர்கள் கண்டறநிந்து ‛கைலாய வைத்யசிகாமணி’ விருது வழங்கப்படும் . அவர்களுக்கும் தலா ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும். அந்தந்த நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களை அதற்காக பரிந்துரைக்கலாம். 


 


இந்து மதத்தின் ஆனிவேராக, அடித்தட்டு நிலையில் இந்து மதத்திற்கு சேவை செய்கின்ற, பாராட்டப்படாத , பாராட்டை எதிர்பாராமல் சேவை செய்கிற தனி மனிதர்களை கொண்டாட வேண்டும்,’’


இவ்வாறு நித்யானந்தா தனது அருளாசியில் குறிப்பிட்டுள்ளார். நித்யானந்தாவின் அறிவிப்பின் படி, 10 பிரிவுகளின் கீழ் 10 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு, தலா ஒரு லட்சம் வீதம், 100 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.