தமிழ் திரையிலகில் கம்-பேக் கொடுத்த நாயகிகளுள் ஒருவர் ஜோதிகா. ரசிகர்களால் செல்லமாக ஜோ என்று அழைக்கப்படும் இவர், மலையாள நடிகர் மம்முட்டியுடன் இணைந்து காதல் தி கோர் எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


காதல் தி கோர்:


திருமணம் முடிந்த பிறகு சில ஆண்டுகள் சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை ஜோதிகா, 36 வயதினிலே திரைப்படம் மூலம் மீண்டும் திரையுலகிற்குள் ரீ என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து பல கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களான மகளிர் மட்டும், பொன்மகள் வந்தால், காற்றின் மொழி, நாச்சியார், உடன் பிறப்பு போன்ற படங்களின் மூலம் மீண்டும் மாஸ் காட்டினார்.


நடிகர் மம்மூட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி சார்பில் உருவாகும் இந்த மலையாள திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஜோ பேபி இயக்குகிறார். இவர் மலையாள திரையுலகில் சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. காதல் தி கோர் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பில், நடிகை சூர்யா கலந்து கொண்ட புகைப்படங்களும் சிறிது நாட்களுக்கு முன்பு வைரலானது.






சூர்யா விசிட்!


காதல் தி கோர் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில், நடிகை ஜோதிகாவின் கணவரும் பிரபல நடிகருமான சூர்யா ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தார். அப்போது அவர் மம்மூட்டியுடன் உரையாடும் புகைப்படங்களும் ஜோதிகாவுடன் மகிழ்ச்சியுடன் பேசும் புகைப்படங்களும் இணையத்தை கலக்கியது. அது மட்டுமன்றி, அங்கு இருந்தவர்களுக்கு மம்மூட்டியுடன் இணைந்து சூர்யா சமைக்கவும் செய்தார். 




படப்பிடிப்பு நிறைவு:


காதல் தி கோர் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டி, வழக்கமாக  ஷூட்டிங் நிறைவு நாளில் அனைவருக்கும் மதிய உணவு வழங்குவார். அதே போல், காதல் தி கோர் படத்தின் ஷூட்டிங் நிறைவு நாளிலும் படக்குழு அனைவருக்கும் மதிய உணவு வழங்கியுள்ளார். 






 


இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “காதல் தி கோர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. சிறந்த குழுவுடன் வேலை பார்த்தது மகிழ்ச்சியளிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.