நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் அடி ஆட்களுடன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் பிரச்சனை ஏற்படுத்தியதாக ரூபி மனோகரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கூறும் பொழுது, “அனைவரும் ஒன்றிணைந்து காங்கிரசை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். காங்கிரஸ் கட்சியின் சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் அடி ஆட்களை அழைத்து வந்து தேவையில்லாத பிரச்சினை ஏற்படுத்தியதாக ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூபி மனோகரனுக்கு ஆதரவாக பேட்டி அளித்தவர்கள் யாருமே காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் அல்ல. தேவையில்லாமல் காங்கிரஸ் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேட்டி அளித்த அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். காங்கிரஸ் கட்சியின் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தேவையில்லாமல் இங்கே இருந்து கூலிக்கு அழைத்து வந்த ரூபி மனோகரின் ஆதரவாளர்கள் அங்கு பிரச்சனை ஏற்படுத்தினர். ரூபி மனோகரன் மீது வருகின்ற 24-ஆம் தேதி ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தப்பட உள்ளது. விசாரணையில் என்ன மாதிரியான அறிக்கை வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என தெரிவித்தனர்.
மேலும், சென்னையில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழகிரி தாக்கியதாக கூறப்படும் நெல்லை மாவட்டம் அயன் சிங்கம்பட்டியை சேர்ந்த தனுஷ்கோடி பேசும்போது, “என்னை மாநிலத் தலைவர் எனது கன்னத்தில் தாக்கவில்லை. லேசாக கையை ஓங்கினார் அவ்வளவு தான். என்னை ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் அழைத்து சென்று சென்னையில் உள்ள ரூபி மனோகரன் வீட்டிற்கு முன்பாக நிறுத்தி ஆளுக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தனர். ஆனால் நான் வாங்கவில்லை. அவர்கள் தான் இங்கே இருந்து அடி ஆட்களை அழைத்து சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன்” என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்