தமிழ் சினிமா மட்டுமில்லை உலக சினிமாவே இதுவரையில் பார்த்திராத ஒரு கற்பனையில் வடிவமைக்க முடியாத நிஜ மனிதர்களை கண்முன்னே கொண்டு நிறுத்திய இயக்குனர் மணிகண்டனின் 'கடைசி விவசாயி' திரைப்படம் இன்றுடன் முதலாம் ஆண்டை நிறைவு செய்கிறது. விஜய் சேதுபதி, யோகி பாபு, முதியவர் நல்லாண்டி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படம் உலக அளவில் சிறந்த படங்களின் வரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 



மாயாண்டி ஐயா - முதியவர் நல்லாண்டி


 


மாயாண்டி ஐயா - ராமையா அண்ணன் :


மாயாண்டி ஐயா என்ற ஒரு மனிதன் சக மனிதனையும் மற்ற உயிர்களுக்கும் கொடுக்கும் மதிப்பு, சமூகத்தின் மீதான பார்வை, இறை நம்பிக்கை, இயற்கையை போற்றுதல் என அப்படத்தின் மூலம் அவர் கற்றுக் கொடுத்த பாடத்தை நாம் வேறு எந்த வழியிலும் கற்க முடியாது. 'கடைசி விவசாயி' படத்தின் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு நாம் எடுத்து செல்ல வேண்டிய உன்னதமான வாழ்க்கை முறை இதுவே.  ராமையா அண்ணன் என்ற கதாபாத்திரமாக மிக அற்புதமாக நடித்திருந்த விஜய் சேதுபதியின் நடிப்பும் பாராட்டுகளை குவித்தது. 






சர்வதேச அங்கீகாரம் :


யதார்த்தமான விவசாயி ஒருவரின் பிரதிபலிப்பாக வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை குவித்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. இது குறித்து பேசியிருந்த இயக்குனர் மிஷ்கின் "சர்வதேச அளவில் சிறந்த படம் என கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படத்தை நாம் பார்க்க தவறியது வெட்கப்பட வேண்டிய ஒரு விஷயம். பட தயாரிப்பாளர்கள் செலவு செய்த பணத்தை வசூல் செய்து இருந்தாலும் அதை வெற்றி படமாக்க நாம் தவறி விட்டோம். மணிகண்டன் ஒரு சிறந்த படைப்பாளியாக தனது உதிரத்தை மூலதனமாக்கி சிறந்த படத்தை கொடுத்துள்ளார். அவர் நினைத்து இருந்தால் பெரிய அளவில் முன்னணி நடிகரை வைத்து படம் எடுத்து கோடிகளை சம்பாதித்து இருக்கலாம் ஆனால் அதை செய்யாமல் சினிமாவை நேசித்தவருக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது" என கூறினார். 






மேலும் இந்த பட்டியலின் படி எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் ஆறாவது இடத்தையும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் 11-வது இடத்தையும் பிடித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.