பல்வேறு மொழிகளில் இருந்து  நடிப்பதற்கான அழைப்புகள் வந்தாலும் படத்தின் கதாநாயகர்களைவிட கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக தெவித்துள்ளார் நடிகை ஹூமா குரேஷி.


ஹூமா குரேஷி


ஸ்டார் வேல்யூ, புகழ், ஆகியவற்றைக் கடந்து  நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து நடித்து வரும் சில பாலிவுட் நடிகர்களில் ஒருவர் நடிகை ஹூமா குரேஷி. பா. ரஞ்சித் இயக்கிய காலா திரைப்படத்தில் சரீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து எச். வினோத் இயக்கிய வலிமை திரைப்படத்தில் நடித்தார். சீரிஸ், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடுவர் என  பங்குபெற்று வரும் ஹூமா குரேஷி, திரைப்படத் தயாரிப்பாளர் முடாசர் அஜீஸை கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கி  நடிகை ஹுமா குரேஷி காதலித்து வந்ததாகத் தகவல்கள் வெளியாகின.


இருவரும் தொடர்ந்து இன்ஸ்டாவில் புகைப்படங்கள் பகிர்ந்து வந்ததுடன் , பொது இடங்களிலும் ஒன்றாக தென்பட்டு வந்தனர்.


இதுகுறித்து இருவருமே வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், சென்ற ஆண்டு இருவரும் பிரிந்ததாகவும் தொடர்ந்து நண்பர்களாக இருவரும் இணைந்து படங்களைத் தயாரிப்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின.


பாலிவுட்டில் மட்டுமில்லாமல் பிற மொழி ரசிகர்களாலும் மதிக்கப்படும் நடிகையாக இருக்கும் ஹூமா குரேஷி, தான் நடிக்கும் படங்களை மிக கவனமாக தேர்வு செய்து வருகிறார். அனுராக் கஷ்யப் இயக்கிய கேங்க்ஸ் ஆஃப் வாஸீப்பூர் படத்தில் இவரது கதாபாத்திரம் அனைவராலும் ரசிக்கப்பட்டது. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்தான் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்வதற்கு முன்பான எந்த காரணிகளை கருத்தில் கொள்கிறார் என்பதை பகிர்ந்துகொண்டுள்ளார்.


சூப்பர்ஸ்டார்களை அல்ல சூப்பர் கதைகளை தேடுகிறேன்..


கொரோனாவிற்கு பின் சினிமாவில் மிகப்பெரிய மாற்றம் நடந்திருக்கிறது. சிறந்த கதைகளை படமாக்கும் மனநிலைக்கு தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் வந்துவிட்டார்கள். அப்படியானவர்களுக்கு இது ஒரு உற்சாகமான காலம். பிற மொழிகளில் இருந்து சிறந்த கதைகளில் நடிக்கும் வாய்ப்புகள் வருகின்றன. அதனால் , நான் யார் நடிக்கிறார்கள் என்பதை பார்ப்பதில்லை. சூப்பர்ஸ்டார்களை அல்ல சூப்பர் கதைகளை மட்டுமே  நான் தேடிச் செல்கிறேன். ஒரு தயாரிப்பாளராக சிறந்த கதைகளை மக்களுக்கு சொல்ல விரும்புகிறேன் . இந்தியாவில் அற்புதமான கதைகள் இருக்கின்றன. மக்களுக்கு அதிகாரம் அளிக்கும்  நேர்மறையான தாக்கத்தை அளிக்கும் கதைகளை சொல்லவே நான் முயற்சிக்கிறேன்.” என்று அவர் கூறியுள்ளார்.


நடிகர்களை உருவக்கேலி செய்யாதீர்கள்


முன்னதாக  நடிகர்களை உருவகேலி செய்வது குறித்து ஹூமா குரேஷி பேசியிருந்தது அனைவரின் கவணத்தையும் ஈர்த்திருந்தது.  “திரைப்படங்களை விமர்சனம் செய்வதை விட சிலர் விமர்சனம் என்ற பெயரில் நடிகர்களை அவதூறாகப் பேசுகின்றனர்.


படம் பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடலாம். படம் பார்ப்பதும் பார்க்காததும் அவரவர் விருப்பம். படம் பிடிக்கவில்லை என்பதற்காக ஏன் தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டும்? தனி நபரை உருவக்கேலி செய்வதால் என்ன கிடைக்கப்போகிறது? தனிநபரை அவதூறாக பேச வேண்டாம். ஏனெனில் எதிர்மறையான கருத்துகள் பாதிப்பை ஏற்படுத்தும்” எனக் கூறினார்