ஆருத்ரா கோல்ட் நிறுவனம் ரூ. 2,438 கோடிகள் மோசடி செய்த வழக்கில் பரபரப்பு குற்றம் சாட்டப்பட்டவர்களுள் ஒருவர் நடிகர் ஆர்.கே.சுரேஷ். திரைப்படத் தயாரிப்பாளரும், பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலைவருமான ஆர்.கே.சுரேஷ், இயக்குநர் பாலாவின் தாரை தப்பட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.


ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் சிக்கி, தேடப்பட்டு வந்த இவர் மீது சென்ற ஆண்டு சென்னை பொருளாதார குற்றப்பிரிவு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்த நிலையில், பின் சென்னை உயர் நீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்த மனுவை அடுத்து லுக் அவுட் நோட்டீஸ் நிறுத்திவைக்கப்பட்டது. 


மேலும் துபாய் சென்று ஆர்.கே.சுரேஷ் தலைமறைவானதாகத் தகவல் வெளியான நிலையில், துபாயில் இருந்து திரும்பிய அவர், தான் தலைமறைவாகலாம் இல்லை என்று கூறி கடந்த டிசம்பர் மாதம் இந்த வழக்கில் நேரில் ஆஜராகினார். 


இதனிடையே ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள காடுவெட்டி நடுநாட்டுக்கதை திரைப்படம் நேற்று முன் தினம். மார்ச் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பேசுபொருளாகி உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும் சர்ச்சைகள் சூழவும் வலம் வந்த மறைந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து காடுவெட்டி திரைப்படம் உருவாகி உள்ளது.


சாதிய சங்கத் தலைவராக ஆர்.கே.சுரேஷ் இந்தப் படத்தில் நடித்துள்ள நிலையில், சோலை ஆறுமுகம் இப்படத்தினை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். தன்னிடம் சீண்டலில் ஈடுபடுபவர்களை  அரிவாள் கொடுத்து வெட்டும்படி பள்ளி மாணவியிடம் சொல்லும் காட்சி உள்பட சில காட்சிகள் இடம்பெற்று விமர்சனங்களை இப்படம் பெற்று வருகிறது.


மேலும், இது அப்பட்டமான சாதியப் படம் என ஒரு தரப்பு ரசிகர்களுடம், ஆர்.கே.சுரேஷ் ரசிகர்கள் திரையரங்குகளில் இப்படத்தைக் கொண்டாடியும் வருகின்றனர். இந்நிலையில்,  “ஆணவக் கொலைகள் ஆதிக்க வர்க்கத்தால் தான் செய்யப்படுகிறதா?” என தன் எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பி திரையரங்கில் தன் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பினை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.


 






காடுவெட்டி திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.17 லட்சம் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வார விடுமுறையை ஒட்டி இன்று இப்படத்தின் வசூல் இரட்டிப்பாக எகிறும் என படக்குழு நம்பிக்கையுடன் காத்துள்ளது. 


சமூக வலைதளத்தில் இப்படக் காட்சிகள் ட்ரெண்டிங்கில் இருந்து வரும் நிலையில், சென்சார் போர்ட்டில் இப்படம் முன்னதாக பெரும் சர்ச்சைகளை சந்தித்தது. மேலும் 31 இடங்களில் கட் செய்யப்பட்டு, பல காட்சிகளில் வசனங்கள் மியூட் செய்யப்பட்டு படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.