இயக்குநர் சரண் இயக்கத்தில் வெளியான காதல் மன்னன் படத்தில் அறிமுகமானவர் நடிகர் மானு. பிறந்தது அசாம் மாநிலம் கவுஹாட்டியில் என்றாலும் பரதநாட்டியம் கற்றுக்கொள்ள தமிழ்நாடு வந்தவர். அந்த திரைப்படத்தில் அறிமுகமான பிறகு தமிழ்ப்பொண்ணாகவே மாறிப்போனார் எனலாம். அரிதாகவே மீடியாவுடன் உரையாடும் அவர் அளித்த பேட்டியிலிருந்து..


“காதல் மன்னன் படம் எல்லோருக்குமே ஒரு மேஜிக்கலான படம். பரத்வாஜ் சார் உடைய முதல் படம், எம்.எஸ்.விஸ்வநாதன் சார் நடிகரா முதன்முதலில் அறிமுகமான படம். விவேக் தான் என்னை அந்தப் படத்தில் நடிக்க அழைத்து வந்தார். நான் தனஞ்செயன் மாஸ்டரிடம் நடனம் கற்றுக்கொண்டேன். அவருடைய சீனியர் மாணவர் ராதிகா சுர்ஜித் எனக்கு அக்கா மாதிரி. விவேக் எங்கேயோ நான் நடனமாடும் புகைப்படத்தை பார்த்துவிட்டு ராதிகா சுர்ஜித்திடம் அணுகியுள்ளார். நடனம் தொடர்பான டாகுமென்ட்ரி எடுப்பதாகவும் அதில் நான் நடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.அதை நம்பி என்னிடம் ராதிகா அக்கா பேசினார். நான் முடியாது என மறுத்துவிட்டேன். அதன் பிறகு அவர் என்னை விடுவதாக இல்லை. எனது நடனப்பள்ளி, நான் செல்லும் சாய்பாபா கோயில் என எல்லா இடத்துக்கும் என்னைத் தேடி வந்து என்னை மனதுமாறச் செய்யப் பார்த்தார்கள். சரண் சாரும் அவர் கூடவே வந்தார். விவேக் அந்தப் படத்தில் உதவி இயக்குநராகவோ அல்லது ரைட்டராகவோ பணியாற்றி இருந்தார். எப்படியோ ஒருவழியாகப் படத்தில் நடிக்க என்னைச் சம்மதிக்க வைத்தார்கள்.”






“சூட்டிங் ஸ்பாட்டில் என்னை மாதிரி ஒரு ஒழுங்கீனத்தை பார்க்கவே முடியாது. ஒட்டுமொத்த டீமும் எதோ பிரச்னை என தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கும். நான் அப்போதுதான் கேமராவில் முகத்துக்கு மேக்கப் போட்டுக் கொண்டிருப்பேன். அஜீத் என்னைப் பார்த்து தலையில் அடித்துக்கொள்வார். சின்னப்பிள்ளைதான் நீ என்பார். அவர் நல்ல மனிதர்.நல்ல நண்பர்.” என்கிறார்.


நடிகர் ரஜினிகாந்த் சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்துக்கொண்டபோது அவருக்காக உடனிருந்து அவரது உடல்நலனை கவனித்துக்கொண்டவர் மானு என்பது குறிப்பிடத்தக்கது.