அன்பே சிவம் படத்தை இயக்க வேண்டும் என்றால் கிளைமேக்ஸ் காட்சியை மாற்ற வேண்டும் என தான் சொன்னதாக இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் நேர்காணல் ஒன்றில் சொன்னது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவன் என பெயர் பெற்றவர் கமல்ஹாசன். சினிமாவில் இவர் செய்து பார்க்காத முயற்சிகளே இல்லை என்பது போல அத்தனை துறைகளிலும் தன்னுடைய பரிசோதனையை மேற்கொள்வார். இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு ‘அன்பே சிவம்’ படத்தில் நடித்தார். சுந்தர் சி இயக்கிய இப்படத்தில் மாதவன், கிரண், நாசர், உமா ரியாஸ், சந்தான பாரதி என பலரும் நடித்தனர். வித்யாசாகர் இந்த படத்துக்கு இசையமைத்தார். கமல்ஹாசன் இந்த படத்துக்கு கதை, திரைக்கதை எழுதியிருந்தார். 


இப்படத்தை முதலில் இயக்கவிருந்தது இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தான். இவர் முன்னதாக கமல்ஹாசனை வைத்து அவ்வை சண்முகி, தெனாலி படங்களை இயக்கியிருந்தார். இதனால் அன்பே சிவம் படத்தின் வாய்ப்பை கே.எஸ்.ரவிகுமாருக்கு வழங்கலாம் என கமல் நினைத்துள்ளார்.


இந்த நிகழ்வை பற்றி பேசியுள்ள இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், “முதலில் அன்பே சிவம் படத்தில் கமல்ஹாசன் - மோகன்லால் வைத்து தான் கதை யோசிக்கப்பட்டது. ஹீரோவுக்கு ஒரு இடத்தில் காதல் தோல்வியடைந்து விடும். போகும் இடத்தில் சந்திக்கும் ஒரு நபருடன் நட்பு ஏற்படுகிறது. அவன் இந்த வீட்டுக்கு வருவான். அந்த நண்பர் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்யும் நிலை இருக்கும். இதையெல்லாம் தெரிஞ்ச இவரு விட்டுக் கொடுத்துட்டு போகிற மாதிரி இருக்கும். இதுதான் அன்பே சிவம் படத்தின் கதையாகும்.


கமல்ஹாசன் இந்த படத்தின் கதையை சொன்னதும் நாம் ரொம்ப ஈர்க்கப்பட்டேன். அவரிடம் கதை நன்றாக இருக்கிறது. ஆனால் கடைசி காட்சியை மட்டும் மாற்றினால் நான் இயக்குகிறேன் என சொன்னேன். என்னால் அதை மாற்ற முடியாது என கமல் சொல்லி விட்டார். எப்படி சார் இப்படி சொல்றீங்க? என கேட்டேன். காதல் தோல்வியடைந்த ஒருவன் அனாதை மாதிரி ஒன்னுமே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறான். அவனுக்கு ஒரு நட்பு கிடைச்சி அது மூலமாக உங்கள் காதல் நிறைவேறினால் தானே எனக்கு ஒரு திருப்தி என்பது இருக்கும் என நான் சொன்னேன்.


அதற்கு அது வழக்கமான ஒன்றாக இருக்கும். நீங்க மாஸ் ஹீரோவாக தான் நினைக்கிறீர்கள். இது ஒரு கிளாஸிக்கல் கதை என கமல்ஹாசன் சொன்னார். நான் கிளைமேக்ஸ் மாற்றாவிட்டால் வேறு கதை பண்ணலாம் என சொல்லிவிட்டேன். சரி அன்பே சிவம் கதையை படமாக எடுக்க மாட்டார் என நினைத்தேன். ஆனால் கமலின் அன்பே சிவத்தை இன்றைக்கு எப்படி பாராட்டுகிறார்கள் என நினைக்கும் போது பிரமிப்பாக உள்ளது” என தெரிவித்துள்ளார். 


இந்த நிகழ்வுக்கு பிறகு கே.எஸ்.ரவிகுமார் - கமல்ஹாசன் கூட்டணி பஞ்ச தந்திரம், தசாவதாரம், மன்மதன் அம்பு ஆகிய படங்களில் பணியாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.