கே.எஸ்.ரவிக்குமார் :
ரஜினிகாந்த், அஜித் என முன்னணி நடிகர்களை வைத்து கமர்ஷியல் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். இவர் வேலை என்றால் கரார் பேர்வழி . அதனால்தான் தயாரிப்பாளர்களுக்கு பிரியமான இயக்குநராகவும் இருந்திருக்கிறார். சொன்ன தேதியில் , சொன்ன பட்ஜெட்டில் சரியாக படத்தை கொடுத்துவிடுவாராம் கே.எஸ்.ரவிக்குமார். யாரை எப்படி வேலை வாங்க வேண்டும் என்பதை நன்கு அறிந்த கே.எஸ்.ரவிக்குமார் சிம்புவால் உச்சபட்ச கோபத்திற்கு சென்றிருக்கிறார். அதனை எப்படி கையாண்டார் என்பதை பகிர்ந்திருக்கிறார்.
கோபப்படுத்திய சிம்பு :
சிம்பு மற்றும் ஜோதிகா நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் சரவணா. இதை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிருந்தார்.தெலுங்கில் ரவி தேஜா, மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியான பத்ரா திரைப்படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகியிருந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் சமயத்தில் சிம்பு முதல் நாள் சொன்ன நேரத்தை விட ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு தாமதமாக வந்திருக்கிறார். அடுத்தடுத்த நாட்களும் இதே நிலை தொடர , கடுப்பாகிப்போன இயக்கிநர் கே.எஸ் ரவிக்குமார் நான் இனிமேல் படத்தை இயக்க மாட்டேன் .
நீ வேறு இயக்குநரை வைத்து படத்தை எடுத்துக்கொள் என்றாராம். அதிர்ந்து போன சிம்பு , ஏன் சார் என்ன ஆச்சு என கேட்க , நீ தினமும் தாமதமாக வருவதில் எனக்கு உடன்பாடில்லை. இந்த படத்தை முடித்துவிட்டு நான் அஜித்தை வைத்து வரலாறு படம் எடுக்க வேண்டும் . குறித்த நேரத்தில் முடிக்க முடியாவிட்டால் எனக்கு அசிங்கமாகிவிடாதா என கடிந்துக்கொண்டாராம். உடனே சிம்பு , நான் இனிமேல் சீக்கிரமாகவே வந்துவிடுகிறேன் என சமாதானப்படுத்தியிருக்கிறார்.
அதற்கு கே.எஸ்.ரவிக்குமார் , நீ எப்போது வேண்டுமானாலும் வா.. ஆனால் நேரத்தை சரியாக சொல்லு , 9 மணி என்றால் 9 மணிக்கு ஸ்பாட்டில் இருக்க வேண்டும் , 11 மணியென்றால் 11 மணிக்கு ஸ்பாட்டில் இருக்க வேண்டும் என்றாராம். சிம்புவிற்கு உணர்த்தவே நான் அப்படி படத்தை விட்டு விலகுவதாக கூறினேனே தவிர உண்மையாக அந்த ஐடியா தனக்கு இல்லை என்றார் கே.எஸ்.ரவிக்குமார். மேலும் சிம்பு இரவு நேரத்தில் ஷூட்டிங் இருக்கிறது என்றாலும் கூட , தயங்காமல் இருந்து நடித்துக்கொடுப்பார் என்றார்.