பாக்யராஜ்... ஜனரஞ்சகமான இயக்குனர். ஜாலியான பேர்வழி. காமெடி ஸ்கிரிப்ட்டுக்கு சொந்தக்காரர் என பல அடையாளங்களை கொண்டனர். பலரும் கூற தயங்கிய விசயத்தை, லெகுவாக பொதுமக்களிடம் கொண்டு சேர்த்ததில் பாக்யராஜூக்கு பெரும் பங்கு உண்டு. 


‛அது என்ன சமாச்சாரம்னா...’ ‛அதுல ஒரு சமாச்சாரம் பாருங்க...’ ‛அந்த சமாச்சாரம்...’ என எதற்கெடுத்தாலும், சமாச்சாரம் என்கிற வார்த்தையை தன் அடையாள வாசனமாக பேசுவது பாக்யராஜின் வழக்கம். நாளடைவில் அதை ரசிக்கவும் செய்தனர். குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் இயக்குனர் நடிகர் என்றாலும், இயற்கையில் பாக்யராஜ் கோபக்காரர். 




குருநாதரான பாரதிராஜா உடன் அவருக்கு இருந்த நெருக்கம் அனைவருக்கும் தெரியும். பாரதிராஜாவின் நிழலாகவும், நிஜமாகவும் இருந்தவரும் அவர் தான். அதனால், எந்த காலகட்டத்திலும் பாக்யராஜை பாரதிராஜா விட்டுத்தரவில்லை. ஆனால், பாரதிராஜா உடன் அடிக்கடி கோபித்து கொண்டு, வெளியேறுவதை பாக்யராஜ் வழக்கமாக கொண்டிருந்தார். சின்ன ஊடல் வந்தாலும், கடிதம் எழுதி வைத்துவிட்டு வெளியேறிவிடுவார். பின்னர், அவரை தேடிப் பிடித்து அழைத்து வருவதை பாரதிராஜாவும் செய்யத் தவறவில்லை. அந்த அளவிற்கு அவர்களுடன் ஒருவிதமான புரிதல் இருந்தது. 


பாக்யராஜ்... எதையும் துணிந்து செய்பவர். அதனாலேயே அவரது முயற்சிகள் புதுமையாகவும், அதே நேரத்தில் புரியும் படியாகவும் இருந்தன. தானே ஹீரோ, தானே இயக்குனர், தானே இசையமைப்பாளர், தானே பாடகர் என்று கூட அவரது சினிமா பயணம் இருந்தது. இன்னும் சொல்ல வேண்டுமானால், டி.ராஜேந்தரை சகலகலா வல்லவன் என்பார்கள், அதில் சிறிதும் குறைவில்லாதவர் பாக்யராஜ். இளையராஜா உடன் மோதல் ஏற்பட்டு, தனியாக இசையமைத்து, அந்த படத்தை அந்த காலகட்டத்தில் ஹிட் அடித்தவர் பாக்யராஜ். 




1977ல் இருந்து திரை உலகில் இருப்பவர், இன்றும் நடிப்பவர், பாக்யராஜ் யார் என்பதை 80களில் இருந்தவர்களும் சொல்வார்கள், 2கே கிட்ஸ்களும் சொல்வார்கள். பாண்டியராஜன், பார்த்திபன், வி.சேகர், லிவிங்ஸ்டன், ஜி.எம்.குமார் என இவரின் சிஷ்யர்கள் ஏராளம். நடனம், சண்டை இதெல்லாம் அன்றைய காலகட்டத்தில் ஹீரோக்களுக்கு கட்டாயமான ஒன்று. ஆனால், அது இரண்டுமே பாக்யராஜூக்கு பெரிய அளவில் வராது. குறிப்பாக, நடனம், அவருக்கு அவரைக்காய் மாதிரி. இன்றும், பாக்யராஜ் டான்ஸ் என்று கிண்டல் செய்பவர்கள் உண்டு. ஆனால், அன்று அதையெல்லாம் கடந்து, கண்ணாடி அணிந்த ஹீரோவாக கொண்டாடப்பட்டவர் பாக்யராஜ்.




அதனால் தான் அவருக்கான தனி ரசிகர் கூட்டம் இருந்தது. இன்று அவருக்கு 69வது வயது. இன்னும் அவரது படைப்புகள் பன்முகத் தன்மையோடு அழியாமல் நம்மோடு பயணிக்கிறது. அது போல அவரும் பயணிக்க, வாழ்த்துகிறது ஏபிபி நாடு.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண