தமிழ் திரையுலகின் பிதாமகர் என அழைக்கப்படும் இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் தன்னுடைய அழிவில்லா படைப்புகள் மூலம் இன்றும் நினைவுகளில் ஊஞ்சலாடுகிறார். நாடக உலகில் தனக்கென ஒரு தனி இடத்தையும் அந்தஸ்தையும் தக்க வைத்து கொண்டவர். அவரின் பல படைப்புகள் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தாலும் சிந்திக்க வைத்த பாராட்டிற்குரிய படங்கள். ஹீரோ சார்ந்த படங்கள் மட்டுமே வெளியாகி வந்த தமிழ் சினிமாவில் வுமன் சென்ட்ரிக் படங்களின் முன்னோடி. 


 



அந்த வகையில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் புரட்சி ஏற்படுத்திய ஒரு படமாக வெளியானது தான் 1992ம் ஆண்டு வெளியான    'வானமே எல்லை' திரைப்படம். ஆனந்த்பாபு, ரம்யா கிருஷ்ணன், பானுப்பிரியா, மதுபாலா, பப்லு பிருத்விராஜ், ராஜேஷ் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படம் இன்றுடன் 32 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


 


பலதரப்பட்ட பிரச்சினைகளால் வீட்டில் இருந்து வெளியேறிய ஐந்து இளைஞர்கள் ஒரு இடத்தில் சந்திக்கிறார்கள். விரக்தியின் உச்சத்தில் இருந்த ஐவரும் 100 நாட்கள் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து விட்டு பின்னர் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுக்கிறார்கள். அவர்களின் தற்கொலை எண்ணம் இறுதி வரை நிலைத்ததா என்பதில் தான் கே. பாலசந்தர் ட்விஸ்ட் ஒன்றை வைத்து இருந்தார்.


 



ஐவரில் ஒருவன் தற்கொலை எண்ணத்தை கைவிட்டதுடன் மற்ற நால்வரையும் அதில் இருந்து மீண்டு வர மனதை மாற்ற முயற்சி செய்கிறான். ஆனால் தற்கொலை தான் முடிவு என தீவிரமாக இருந்த நால்வரும் நண்பனின் அந்த முடிவை ஏற்றுக்கொள்ள மறுக்க மனமுடைந்தவன் ஒரு நாள் தற்கொலை செய்து கொள்கிறான். அவனுடைய அப்பா மற்ற நால்வர் தான் மகனின் தற்கொலைக்கு காரணம் என பழியை அவர்கள் மீது போடுகிறார். இதனால் மனம் நொந்து போன நால்வரும் தற்கொலை செய்து கொள்வதற்காக செல்ல அந்த இடத்தில் இறந்து போனதாக சொல்லப்பட்ட நண்பனை சந்திக்கிறார்கள். 


 




நால்வரையும் தற்கொலை எண்ணத்தில் இருந்து மீட்டு எடுப்பதற்காக நண்பனும் அவனது தந்தையும் சேர்ந்து போட்ட நாடகம் என்பது தெரிய வருகிறது. நண்பனின் தந்தை அனைவரையும் உடல் ஊனமுற்றவர்கள் ஆசிரமத்துக்கு அழைத்து செல்கிறார். அவர்களே ஊனத்தை மறந்து சந்தோஷமா சாதனையாளர்களாக வாழும் போது நம்மால் ஏன் இந்த உலகில் சாதிக்க முடியாது என்ற முடிவுக்கு வருகிறார்கள். 


மரகதமணி இசையில் இப்படத்தில் இடம்பெற்ற நாடோடி மன்னர்களே, கம்பங்காடே கம்பங்காடே, அட யாரிங்கே மனிதன், ஜனனம் மரணம், நீ ஆண்டவனா உள்ளிட்ட அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்கள். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படங்களின் வரிசையில் நிச்சயம் இந்த படத்திற்கும் ஒரு இடம் உண்டு.