தமிழ் சினிமாவின் ஜாம்பவானாக இன்று நட்சத்திர அந்தஸ்து பெற்ற நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல் போன்ற உச்சபட்ச நடிகர்களின் வளர்ச்சிக்கு முக்கியமானவராக, பல இயக்குநர்களை உருவாக்கிய ஆசானாக இருந்தவர் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர். தமிழ் சினிமாவில் அவரின் பங்களிப்பு ஏராளம். 


மிக பெரிய இயக்குநராக இருந்தாலும் அவரோ அல்லது அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களோ சினிமாவில் நடித்ததில்லை. அவரின் மாணவன் உலகநாயகன் கமல்ஹாசன், பாலச்சந்தரை வேண்டிக்கொண்டதன் பேரில் ஒரு சில காட்சிகளில் மட்டும் 'உத்தமவில்லன்' படத்தில் தோன்றினார். தற்போது அவருக்கு பிறகு அவரின் குடும்பத்தில் இருந்து ஒருவர் சினிமா துறையில் நடிப்பில் கலக்க களம் இறங்கியுள்ளார். அவர் தான் பாலச்சந்தரின் மகன் கைலாசத்தின் மனைவி கீதா கைலாசம். 


 



கே. பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனத்தின் அனைத்து பணிகளையும் மேற்பார்வையிட்ட அனுபவம் இருப்பினும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு போதும் கீதாவுக்கு இருந்ததில்லையாம். சமீபத்தில் தான் தியேட்டர் ஆர்டிஸ்டாக இருந்தவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது. உன் கனவுகளை வெளிப்படுத்த நீ தான் போராட வேண்டும் என தனது மகள் தான் ஊக்குவித்ததாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் கீதா கைலாசம். 


சார்பட்டா பரம்பரை படத்தில் ரங்கன் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்த பசுபதியின் மனைவியாக நடித்த கீதா ஒரு சில காட்சிகளில் மட்டுமே தோன்றியிருந்தாலும் அந்த கதாபாத்திரத்துடன் தன்னை இணைத்து கொண்டு சிறப்பாக நடித்து இருந்தார். அதே போல ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான 'வீட்ல விசேஷங்க' படத்தில் நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படி குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த கீதா கைலாசத்திற்கு மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'மாமன்னன்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்படத்தில் வைகை புயல் வடிவேலுவின் மனைவி வீராயி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது வரையில் கீதா கைலாசம் நடித்த படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களின் கவனம் பெறவில்லை. ஆனால் தற்போது மாமன்னன் திரைப்படத்தில் அவர் நடிப்பில் ஸ்கோர் செய்ய அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதை அவர் சிறப்பாக பயன்படுத்தி கொண்டுள்ளார். 


மாமன்னன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து கீதா பேசுகையில் "இப்படத்தில் நான் வடிவேலுவுடன் நடிக்க வேண்டும் என்று கூறும் போது கொஞ்சம் பயமாக இருந்தது. அவரை நேரடியாக ஸ்பாட்டில் பார்த்த பிறகு அவருடன் நடிப்பதை சவாலாக எடுத்துக் கொண்டேன். இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரவுடிகள் வீட்டை நொறுக்கும் காட்சியில் அவர்களுக்கு பயந்து கட்டிலுக்கு அடியில் போய் ஒளிந்து கொண்ட காட்சியில் எனது நடிப்பை பலரும் பாராட்டினார்கள். இப்படம் ரசிகர்கள் மத்தியில் எனக்கு நல்ல ஒரு அடையாளத்தை பெற்றுக் கொடுத்துள்ளது' என்றார் கீதா கைலாசம். 


தனது 50 வயதில் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ள கீதா கைலாசம் ஒரு அறிமுக நடிகையை போல ஓட்டம் எடுக்கிறார். இனி நிச்சயமாக அவருக்கு வாய்ப்புகள் குவிந்து ஆச்சரியமான மாற்றத்தை  ஏற்படுத்தும்.