ஒவ்வொரு முறை ஒரு படம் வெளியாகும் போதும், அதிலிருந்து ஏதாவது ஒரு தாக்கம் நம்மை அறியாமல், எங்காவது ஒரு இடத்தில் நின்று கொண்டிருக்கும். அப்படி தான், ‛வெந்து தணிந்தது காடு’ படமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ‛அந்த படம் ஒரு தாக்கத்தை மட்டுமா ஏற்படுத்தியது...’ என்று நீங்கள் முனுமுனுப்பது நன்றாக கேட்கிறது. 






குறிப்பாக, கூல் சுரேஷ் செய்த தாக்கம் தான் அபரிவிதமானது. வணக்கத்தை போடு... வணக்கத்தை போடுனு ஒரு வழியாக, ஐபோன் கிப்ட் வாங்கி, அதுக்கு வணக்கத்தை போட்டாங்க. கூல் என்பதே ஒரு அடையாளம் தான். இப்போது வெந்து தணிந்தது காடு... வணக்கத்தை போடு என்கிற அடையாளமும் அவருக்கு கூடுதலாக சேர்ந்துவிட்டது. 


மல்லிப்பூ பாடலை வைத்து, தொலை தூரத்தில் பிரிந்து வாழும் கணவன், மனைவியின் நெருக்கத்தை கொஞ்ச நாட்களாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். சரி, படம் வெளியாகும் போது இந்த வைப் எல்லாம் இருக்கத்தானே செய்யும் என்பதால், அதை கண்டுகொள்ளாமல் கடந்தோம். 


வெந்து தணிந்தது காடு கடந்து, நானே வருவேன், பொன்னியின் செல்வன் என வேறு வைப்ஸ் வந்துவிட்டது. ஆனாலும், வெந்து தணிந்தது காடு வைப் போகவில்லை. பிரபல உணவகமான ஜூனியர் குப்பண்ணா, ‛இசக்கி புரோட்டா’வை தங்கள் மெயின் மெனுவாக மாற்றியிருக்கிறார்கள்.






அதென்னா இசக்கி புரோட்டா? இசக்கி என்கிற பெயரை கேட்டாலே அது எல்லாருக்கும் தெரியும், அது நெல்லை பெயர் என்று. வெந்து தணிந்தது காடு படத்தில் பஞ்சம் பிழைக்க மும்பை வரும் தனுஷ், அங்குள்ள நெல்லைக்காரரின் கடையான ‛இசக்கி புரோட்டா’ கடையில் தான் பணியாற்றுவார். பெயருக்கு புரோட்டா கடையாகவும், பின்னணியில் அன்டர்கிரவுண்ட் பணிகளும் நடக்கும் அந்த உணவகம் தான் கதையின் மைய கரு. 


அதனாலேயே இசக்கி புரோட்டா என்கிற பெயர், பலரின் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. இதை பயன்படுத்த நினைத்த ஜூனியர் குப்பண்ணா உணவகம், தனது உணவு பரிமாறும் மேஜையில், ‛இசக்கி புரோட்டா’ விளம்பரத்தை வைத்துள்ளனர். வெந்துதணிந்தது காடு படம் மற்றும் சிம்புவிற்கு சமர்ப்பணம் என்றும், எங்களின் பெருமை மிகு அறிமுகம் என்றும், இசக்கி புரோட்டாவிற்கு டைட்டில் கொடுத்திருக்கிறது ‛ஜூனியர் குப்பண்ணா’.


உண்மையில் கூல் சுரேஷ் இதை பார்த்தாலோ, கேட்டாலோ... ‛இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே...’ என்று தான் கூறுவார். வெந்து தணிந்தது காடு... சுடச்சுட புரோட்டாவை பிச்சுப் போடு!