சமீபத்தில் `ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் பெரு வெற்றிக்குப் பிறகு, தொடர்ந்து பல்வேறு முன்னணி படங்களில் களமிறங்கி வருகிறார் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். அடுத்தடுத்து பெரிய இயக்குநர்கள் கொரடாலா சிவா, பிரஷாந்த் நீல் முதலானோருடன் இணைந்துள்ள ஜூனியர் என்.டி.ஆரின் அடுத்தகட்ட அப்டேட்கள் சமூக வலைத்தளங்களில் அதிர்வுகளை உருவாக்கியுள்ளன. இந்நிலையில் சமீபத்தில், தமிழ் இயக்குநர் வெற்றிமாறனின் பான் இந்தியத் திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தகவல்களின்படி, ஜூனியர் என்.டி.ஆர் இந்தத் திரைப்படத்தில் நடிக்க ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அவரது அடுத்தடுத்த படங்கள் முடிவடைந்த பிறகு, இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் ஜூனியர் என்.டி.ஆரிடம் கூறிய கதையில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. `கே.ஜி.எஃப்’ திரைப்படங்களை இயக்கிய பிரஷாந்த் நீல் உருவாக்கத்தில் வெளிவரும் `NTR31' படப்பிடிப்புப் பணிகள் முடிந்தவுடன், இயக்குநர் வெற்றிமாறனின் படப்பிடிப்பில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகவில்லை.
தென்னிந்தியாவின் மிக முக்கியமான இயக்குநர்களுள் ஒருவரான வெற்றிமாறனின் திரைப்பயணம் பல்வேறு தரப்பினராலும் வரவேற்கப்பட்ட திரைப்படங்களைக் கொண்டது. இதுவரை தோல்வியடையாத திரைப்படங்களையே உருவாக்கி வந்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். `ஆடுகளம்’, `விசாரணை’, `அசுரன்’, வடசென்னை’ முதலான அவரது திரைப்படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை.
`NTR30' என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள படத்தில் நடித்து வருவதில் பிஸியாக இருக்கிறார் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். கமர்சியல் ஆக்ஷன் பொழுதுபோக்குத் திரைப்படமாகக் கருதப்படும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கு அடுத்ததாக இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் இணைகிறார் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.
இயக்குநர் வெற்றிமாறன் தற்போது நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி ஆகியோருடன் இணைந்து `விடுதலை’, ஜல்லிக்கட்டு பற்றி நடிகர் சூர்யாவுடன் `வாடிவாசல்’ முதலான திரைப்படங்களை இயக்கி வருகிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்