மக்களை எந்த அளவிற்கு தனது அசாத்தியமான உடல்மொழியில், முக பாவனைகள், நகைச்சுவையால் வயிறு குலுங்க சிரிக்க வைத்தாரோ அதே அளவிற்கு சிந்திக்கவும் வைத்தவர் ஜே.பி. சந்திரபாபு. இன்று லட்சங்களில் சம்பளம் என்பது ஒரு சாதாரண விஷயமாக உள்ளது. ஆனால் அதை 50’ஸ் காலத்திலேயே பெற்று ராஜாவாக வாழ்ந்தவர் தனது இறுதி காலகட்டங்களில் வறுமையில் வாடி 46 வயதிலேயே மரணத்தை சந்தித்தார் என்பது ஒரு சோகமாக விஷயம். சிந்தனையாளன் சந்திரபாபுவின் 49வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஆண்டுகள் பலவாயினும் இன்னும் ரசிகர்கள் சந்திரபாபுவை மறக்கவில்லை என்பது பல சமூக வலைத்தளப்பதிவுகள் காட்டியது.
குறுகிய காலத்தில் உச்சம் தொட்டவர் :
1947ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார். ஆனால் வாய்ப்புக்காக தற்கொலை வரை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுகமான ஆறு ஏழு ஆண்டுகளிலேயே பிரபலத்தின் உச்சிக்கு சென்று எம்.ஜி.ஆர், சிவாஜி என அனைவரின் படங்களிலும் நகைச்சுவை நடிகராக தடம் பதித்தவர். ஒரு காமெடியனாக மட்டும் இல்லாமல் நடிப்பு, நடனம், பாடல் என அனைத்திலுமே ஒரு தனி ஸ்டைல் கொண்டவர். அவர் மேற்கத்திய உடை, ஆங்கிலம், ராக் அன் ரோல் ஸ்டைல் டான்ஸ் இவை அனைத்தும் ரசிகர்களை அவர் வசம் ஈர்த்தது. இன்றும் சந்திரபாபு ஸ்டைல் டான்ஸ் மக்கள் மத்தியில் பிரபலம். நின்ற இடத்திலேயே கால்களை மட்டும் அசைத்து ஆடுவது அவரின் ஸ்பெஷாலிட்டி. டூப் போட்டு நடிக்கும் பழக்கம் இல்லாத சந்திராபாபு எகிறி குதிப்பது, பல்டி அடிப்பது என அனைத்து சேஷ்டைகளையும் தானே செய்து அனைவரையும் மயக்கி விடுவாராம். சந்திரபாபுவின் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் பிரபலமானவை என்றால் அது மிகையல்ல.
மெட்ராஸ் பாஷையின் குருநாதர் :
மேற்கத்திய ஆங்கிலத்தை சரளமாக பேசுபவர் மட்டுமல்ல சந்திரபாபு லோக்கலாக மெட்ராஸ் பாஷையை சினிமாவில் அறிமுகப்படுத்திய குருநாதரும் அவரே தான். சபாஷ் மீனா திரைப்படத்தில் ரிக்ஷாகாரனாக சும்மா மெட்ராஸ் பாஷயில் அதனை இயல்பாக அசத்தியிருப்பார். இதுவரையில் அதை அடித்து கொள்ள ஆளே இல்லை எனலாம். சந்திரபாபு விதை போட்டதை தொடர்ந்து தான் தமிழ் சினிமாவில் அடுத்தாக வந்த லூஸ் மோகன், கமல்ஹாசன், தேங்காய் ஸ்ரீனிவாசன், சுரிராஜன் போன்ற பலரும் மெட்ராஸ் பாஷயை பயன்படுத்த தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
எவர்கிரீன் பாடல்கள் :
சந்திரபாபு பாடிய 'நான் ஒரு முட்டாளுங்க', 'புத்தி உள்ள மனிதர் எல்லாம்', 'ஒன்னுமே புரியல உலகத்தில', 'சிரிப்பு வருது' மற்றும் அவரின் ஏராளமான திரைப்பாடல்கள் காலத்தால் அழியாத இன்றும் ரசிக்கக்கூடிய எவர்கிரீன் திரைப்பாடல்கள். தன்னை போல யாராலும் நடிக்க முடியாது என கர்வமாக சவால் விட்டவர் சந்திரபாபு. ஆனால் அவர் கூறியது போல அவரின் ஸ்டைல் நடிப்பை இந்த தமிழ் சினிமா அவருக்கு பிறகு வேறு யாரிடமும் காணமுடியவில்லை என்பது உண்மையே.
வெளிப்படையான குணம் கொண்டவர் :
உச்சத்தில் இருந்த சந்திரபாபு மிகவும் ஆசை ஆசையாக உல்லாச மாளிகையை காட்டினார் ஆனால் அது கட்டி முடிக்கும் போது அவர் பட்ட நஷ்டம் வார்த்தைகளால் சொல்ல இயலாது. வெளிப்படையான வாழ்க்கை, வெளிப்படையான பேச்சு, முகஸ்துதி, போலி புகழ்ச்சி பிடிக்காத சந்திரபாபுவின் தனிப்பட்ட வாழ்க்கை இனிய இல்லறமாக அமையவில்லை. திருமணமான அன்றே தனது மனைவி வேறு ஒருவரை காதலிக்கிறார் என தெரிந்ததும் அவருடன் சேர்த்து வைத்தார் என ஒரு கதை கூறப்படுகிறது.
புதிராகி போன வாழ்க்கை :
1960க்கு பிறகு அவரின் திரைவாழ்க்கையில் சறுக்கல் ஏற்பட்டது. கதாநாயகனாக நடித்த இரண்டு படங்கள் தோல்வியை சந்தித்தன. அடுத்தடுத்து எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடியவே எக்கப்பட்ட நஷ்டத்தில் சிக்கி கடன் தொல்லையால் படாதபாடு பட்டு வறுமையில் வாடினார். போதைக்கு அடிமையான சந்திரபாபு தனது 46 வயதில் மரணமடைந்தார். மிகவும் ஏழ்மையான ஒரு குடும்பத்தில் இருந்து சினிமாவில் நுழைந்து உச்சத்தை தொட்டு பார்த்துவிட்டு வந்ததை வைத்து சாமர்த்தியமாக வாழ தெரியாமல் மீண்டும் வறுமையில் சிக்கி மறைந்த சந்திரபாபுவின் வாழ்க்கை ஒரு புதிராகவே முடிந்தது.