மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நாளை(ஆகஸ்ட் 6) ஒடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் வெளியாக உள்ளது ஆந்தாலஜி வெப் சீரிஸ் “நவராசா”. இந்த தொடரில் சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த் , அதர்வா , ரேவதி உள்ளிட்ட பல முக்கிய மற்றும் முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர். இதில் கெளதம் மேனன், அரவிந்த்சாமி, பிரியதர்ஷன், கார்த்திக் நரேன், வஸந்த் சாய், கார்த்திக் சுப்புராஜ், பிஜோய் நம்பியார், சர்ஜூன், ரதீந்திரன் பிரசாத் என 9 இயக்குநர்கள் 9 கதைகளை இயக்கியுள்ளனர். வெப் தொடரை மணிரத்தினம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் வெப் தொடரில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு குறும்படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான், டி.இமான், ஜிப்ரான், அருள்தேவ், கார்த்திக் உள்ளிட்ட 9 பேர் இசையமைத்துள்ளனர். இந்த ஆந்தாலஜி தொடரானது முற்றிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரைத்துறையை சேர்ந்த தொழிலாளர்களுக்கு நிதி திரட்டும் நோக்கில் தயாராகியுள்ளது. பூமிகா என்ற அறக்கட்டளை மூலமாக இதற்கான நிதி திரட்டப்படுகிறது. மேலும் நவரசாவில் பணிப்புரிந்த நடிகர்கள் யாரும் இதற்கான சம்பளம் பெறவில்லை.
’நவரசா’ நாளை 120 நாடுகளில் வெளியாக உள்ள நிலையில் தொடரின் புரமோஷன் மற்றும் பூமிகா அறக்கட்டளைக்கு பொதுமக்களிடம் நிதி திரட்டும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதன்படி இன்று மாலை 6.55 மணிக்கு டிவிட்டர் ஸ்பேஸில் படத்தின் நடிகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் ஒன்று கூடி கலந்துரையாட உள்ளனர். மேலும் நவரசா பாடல்களையும் லைவாக இசைக்க உள்ளார்களாம் இது குறித்த அறிவிப்பை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் மற்றும் படக்குழுவினர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த ஈவன்டை Symphony of Emotions என குறிப்பிட்டுள்ளனர். மேலும் பூமிகா அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க விரும்பும் பொதுமக்களுக்கான லிங்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சினிமா துறையினருக்கு நன்கொடை வழங்கலாம்.
நவரசா ஆந்தாலஜி தொடரின் விவரங்கள் :
1.காதல்
காதலை மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ள குறும்படத்திற்கு ’கிட்டார் கம்பி மேல நின்று ’ என பெயர் வைத்துள்ளனர். இதனை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். சூர்யா கதாநாயகனாகவும், ப்ரக்யா கதாநாயகியாவும் நடித்துள்ளனர்.
2. கருணை
கருணையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கதைக்கு ’எதிரி’ என பெயரிட்டுள்ளனர்.இதனை பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார். படத்தில் விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், அசோக் செல்வன், ரேவதி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.
3.சினம்
கோபத்தை மையப்படுத்திய கதைக்கு ’ரௌத்திரம் ’என பெயரிடப்பட்டுள்ளது. அரவிந்த் சாமி இயக்கத்தில் ரித்விகா, ஸ்ரீராம், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
4. அருவருப்பு
அருவருப்பை மையப்படுத்தி உருவாகியுள்ள படத்தை வஸந்த் சாய் இயக்கியுள்ளார். இதற்கு 'பாயசம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் டெல்லி கணேஷ், ரோகினி, அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
5.துணிவு
துணிவை மையப்படுத்தி உருவாகியுள்ள கதைக்கு . 'துணிந்த பின்' எனப் பெயரிடப்பட்டுள்து . இந்தப் குறும்படத்தில் அதர்வா, அஞ்சலி, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதை சர்ஜுன் இயக்கியுள்ளார்.
6.அச்சம்
பயத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள தொகுப்பை ரதீந்திரன் பிரசாத் இயக்கியுள்ளார். இதற்கு 'இன்மை' எனப் பெயரிடப்பட்டுள்ளது . இதில் சித்தார்த், பார்வதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
7.அமைதி
அமைதியை மையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள பகுதிக்கு ‘பீஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இதில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், பாபி சிம்ஹா, சனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
8.வியப்பு
ஆச்சரியத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த பகுதியை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். 'ப்ராஜெக்ட் அக்னி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, பிரசன்னா, பூர்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
9.நகைச்சுவை
முழுக்க முழுக்க காமெடி கதைக்களம் கொண்ட இந்த குறும்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். 'சம்மர் ஆஃப் 92' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பகுதியில் யோகி பாபு, ரம்யா நம்பீசன், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.