இயக்குநர் ராம் இயக்கத்தில் அறிமுகப்படமாக உருவான “கற்றது தமிழ்” வெளியாகி இன்றோடு 16 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ராமின் அறிமுகப்படம்
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு ஆகிய படங்கள் மூலமாக தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக மாறிப்போனவர் இயக்குநர் ராம். இவரின் அறிமுகப்படமாக 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி வெளியான படம் “கற்றது தமிழ்” . இந்த படத்தில் ஜீவா ஹீரோவாக நடிக்க, அறிமுக நடிகையாக அஞ்சலி அறிமுகமாகியிருந்தார். மேலும் கருணாஸ், அழகம் பெருமாள் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு முதலில் தமிழ் எம்.ஏ., என பெயரிடப்பட்டது. ஆனால் தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு கிடைக்கும் என்ற காரணத்தால் கற்றது தமிழ் என மாற்றப்பட்டது.
பிரபாகர் ..ஆனந்தி
இப்படத்தில் பிரபாகராக ஜீவாவும் , ஆனந்தியாக அஞ்சலியும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டிருந்தார்கள் என்றே சொல்லலாம். காலத்தின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள நினைக்கிறான் ஜீவா. அதற்கு அவர் படித்த படிப்பு தொடங்கி செய்யும் வேலை வரை பல காரணங்கள் இருக்கிறது. உலகமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கலின் வளர்ச்சியால் தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் பட்டப்படிப்பாக கற்றுக்கொண்டு வேலை கிடைக்காமலும், அப்படியே ஆனாலும் கிடைத்த வேலையை தக்கவைக்க முடியாமலும் போராடும் இளைஞராக இருப்பார். பிரபாகருக்கு தெரிந்தது எல்லாம் ஆனந்தி மட்டும் தான். அவனின் உயிர் மூச்சும் அவள் தான்.
சமூகத்தால் தான் பட்ட அவமானங்களுக்கும், நிம்மதியின்மைக்கும் வன்முறையை கருவியாக பார்க்கிறான். இதற்கிடையில் காதலியை தேடி வட இந்தியா செல்லும் போதும் சரி, பாலியல் விடுதியில் ஆனந்தியை மீட்டு புதுவாழ்க்கை தொடங்க நினைக்கும் பிரபாகரை இந்த சமூகம் என்ன செய்கிறது என்பதை எதிர்பாராத கிளைமேக்ஸோடு கொடுத்திருந்தார் இயக்குநர் ராம்.
கொண்டாட வேண்டிய படம்
பிரபாகர் - ஆனந்தி காதலுக்காகவே இப்படத்தை ஆயிரம் ஆயிரம் முறை கொண்டாடலாம். அவள் எவ்வளவு பெரியவளானாலும் சரி, “என்ன இருந்தாலும் கோழி றெக்க பிடிச்சு கொடுத்த அதே குட்டி ஆனந்திதானே எனக்கு” என சொல்லும் பிரபாகரின் அந்த காதல் மொழி ரசிகர்களை மெய்மறக்க செய்தது. தன் அத்தனை கவலைகளையும் மறந்துவிட்டு பிரபாகரின் வார்த்தையை “நெசமாத்தான் சொல்றியா” என்ற ஒற்றை வார்த்தை மூலம் முழுமையாக்கும் அந்த வார்த்தை இன்றைக்கும் பலரின் ஃபேவரைட்..!
ஊர்,பெயர் தெரியாத ஆனந்திக்கு கடிதம் எழுதுவது தொடங்கி, சுடுதண்ணீர் கூட என் ஆனந்தியை நியாபகப்படுத்தும் என சொல்லும் ஒவ்வொரு காட்சியும் கவிதை தான். லெட்டர் எழுத ஒரு பெயர் வேண்டும், அதற்கு உலகத்துல உன் பேர விட பொருத்தமான பேர் கிடைக்கவா போகுது ஆனந்தி என சொல்லும் இடத்தில் ரசிகர்கள் உருகித்தான் போனார்கள். பிரபாகர் உலகத்தில் இருக்கும் ஆனந்தி ஒரு தேவதைக்கும் மேல் தான்..!
வருடிக்கொடுத்த நா.முத்துக்குமார் -யுவன்
கற்றது தமிழ் படத்தில் காதலில் கசிந்துருகும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும், நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளும் பெரும் நம்பிக்கையை கொடுத்தது. இளையராஜா பாடிய “பறவையே எங்கு இருக்கிறாய்” பாடல் தொடங்கி, “உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது வரை” அத்தனை பாடல்களும் உள்ளத்தை உருக வைத்தது. இந்த படம் வெளியான புதிதில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் இன்று கொண்டாட வேண்டிய படங்கள் வரிசையில் கற்றது தமிழ் படத்தை கொண்டாடுகிறார்கள்.