தீபாவளி ரிலீசாக வெளியாகியுள்ள ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா படங்களின் வசூல் நிலவரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.


இந்த ஆண்டு தீபாவளி ரிலீசாக கோலிவுட்டில் ராகவா லாரன்ஸ் - எஸ்.ஜே.சூர்யா நடிப்பில்  ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கார்த்தி நடிப்பில் ஜப்பான், ரெய்டு, கிடா ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றன. கோலிவுட் தவிர்த்து தி மார்வெல்ஸ், டைகர் 3 படங்களும் ரிலீசாகி உள்ளன.


இவற்றில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் ஜப்பான் படங்கள் முன்கூட்டியே அதாவது நேற்று முன் தினம் (நவ.10) வெளியாகின.


ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தியின் 25ஆவது படமாக உருவாகியுள்ள ஜப்பான் மீது பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தன. இதேபோல் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமாக உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மீதும் அதன் முந்தைய பாகத்தின் வெற்றி காரணமாக எதிர்பார்ப்புகள் இருந்தன.


இந்நிலையில் ஜிகர்தண்டா திரைப்படம் பாசிட்டிவ் ரிவ்யூக்களையும், ஜப்பான் படம் எதிர்மறை விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறது. மேலும், இந்த இரண்டு படங்களின் முதல் 2 நாள்கள் வசூல் நிலவரத்தை பாக்ஸ்ஆஃபிஸ் தரவுகளைப் பகிரும் பிரபல sacnilk நிறுவனம் பகிர்ந்துள்ளது.


அதன்படி ஜிகர்தண்டா திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் சேர்த்து 2.41 கோடிகளை வசூலித்துள்ளதாகவும், இரண்டாம் நாள் தோராயமாக 4. 50 கோடிகளை வசூலித்துள்ளதாகவும், மொத்தம் இதுவரை ரூ.6.91 கோடிகளை இப்படம் வசூலித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 






அதேபோல்,  ஜப்பான் திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் முதல் நாள் 4.15 கோடிகளையும், இரண்டாம் நாள் தோராயமாக 3 கோடிகளையும் என மொத்தம் ரூ. 7.15 கோடிகளை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


ஜிகர்தண்டா 2 திரைப்படம் எதிர்பார்ப்புகளைக் கடந்து பாசிட்டிவ் விமர்சனங்களைக் குவித்து வரும் நிலையில், இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.