ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்


ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டவர்கள் நடித்து கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கடந்த நவம்பர் 10 ஆம் தேதி வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது


4 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில்


கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படம் 2019ஆம் ஆண்டு வெளியானது. இதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய ‘ஜகமே தந்திரம்’ மற்றும் ‘மஹான் உள்ளிட்ட இரண்டு படங்களும் ஓடிடியில் வெளியாகின. தற்போது 4 ஆண்டுகளுக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜின் படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இது குறித்து அவர் பேசுகையில், “பேட்ட மாதிரியான மிகப்பெரிய ஒரு படத்திற்கு பிறகு நான்கு ஆண்டுகளுக்கு திரையரங்குகளில் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்படும் என்பதை நான் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. என்னுடைய முதல் படமான பீட்சா படம் வெளியானபோது இருந்த பதற்றம் இந்தப் படத்தில் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். 


ஜிகர்தண்டா படத்தின் கதை


மதுரையின் பிரபல ஜிகர்தண்டா க்ளப்பின் தலைவன், தென் மாவட்டங்களை கண்ட்ரோலில் வைத்திருக்கும் ரவுடி ‘அல்லியன் சீசர்’ கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ்.  சந்தர்ப்ப வசத்தால் கொலையாளியாக மாற்றப்பட்டு ஜெயிலுக்கு செல்லும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு அல்லியன் சீசரை கொன்றால் சிறையிலிருந்து விடுதலை, அவர் ஆசைப்பட்ட போலீஸ் வேலை என இரண்டு ஆஃபர் வருகிறது. உள்கட்சி அரசியல் - காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றின் பகடைக்காயாக அனுப்பி வைக்கப்படும் எஸ்.ஜே.சூர்யா, சீசரை கொல்ல சினிமா எனும் ஆயுதத்தை கையில் எடுக்கிறார்.


போட்டி மனப்பான்மை, பிரபல ஹாலிவுட் நடிகர் ‘க்ளிண்ட் ஈஸ்ட்வுட்’ மேல் இருக்கும் மோகம் ஆகியவற்றால் தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோவாக ஆசைப்படும் சீசரிடம், சினிமா இயக்குநராக நடித்து அறிமுகமாகி அவரை படம் எடுக்க ஒப்பந்தம் ஆகிறார்.




 



எஸ்.ஜே.சூர்யா கையில் எடுத்த காரியம் நிறைவடைந்ததா, லாரன்ஸ் சுதாரித்தாரா, இவர்களை வைத்து அரசியல் செய்தவர்கள் என்ன ஆனார்கள் என்பதை 2 மணி நேரம் 50 நிமிடங்கள் சினிமாவாக மதுரை மணக்கும் ஜிகர்தண்டா விருந்து படைத்திருக்கிறார்கள்.


ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கார்த்திக் சுப்பராஜ்


ஜிகர்தண்டா படத்திற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இன்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி  தெரிவித்துள்ளார். படப்பிடிப்பின் போது யானைகளுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் இதுடன் பகிர்ந்துள்ளார்.