ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த நவம்பர் 10ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன், இளவரசு, சஞ்சனா நடராஜன், சத்யன்,  நவீன் சந்திரா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் பாராட்டுக்களைப் பெற்றார்கள். குறிப்பாக  கதாநாயகியாக நடித்த நிமிஷா சஜயன் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளார்.


நிமிஷா சஜயன்


தொண்டிமுதலும் த்ரிக்‌ஷாக்ஷியம், தி கிரேட் இந்தியன் கிச்சன், மாலிக், நயட்டு உள்ளிட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளார் நிமிஷா சஜயன். இந்தப் படங்களில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் மலையாள சினிமா தவிர்த்து பரவலான கவனத்தைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் சித்தார்த் நடித்து வெளியான சித்தா திரைப்படத்தில் நடித்தார் நிமிஷா சஜயன். இப்படத்தில் அவரது கதாபாத்திரம் பரவலாக கவனம் பெற்றதைத் தொடர்ந்து, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நிமிஷா நடித்த மலையரசி கதாபாத்திரம் தமிழ் சினிமாவிலும் பிரபல நடிகையாக அவரை அடையாளம் காட்டத் தொடங்கி இருக்கிறது. 


மாமதுர பாடலுக்கு நடனம்


 ஜிகர்தண்டா படத்தில் இடம்பெற்ற மாமதுர பாடல் பட்டி தொட்டி எல்லாம் ஹிட் அடித்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தோஷன்  நாராயணனின் இசையை ரசித்து ரசிகர்கள் இந்தப் பாடலைக் கொண்டாடி வருகிறார்கள். தற்போது நிமிஷா சஜயன் மாமதுர பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 






பத்திரிகையாளரைக் கண்டித்த கார்த்திக் சுப்பராஜ்


சமீபத்தில் பத்திரிகையாளர்களை படக்குழு சந்தித்தபோது ஒருவர் கார்த்திக் சுப்பராஜிடம், சித்தா மற்றும் ஜிகர்தண்டா படத்தில் நடித்த நிமிஷா சஜயன் அழகாக இல்லை என்றாலும் சிறப்பாக நடிக்கிறார் என்று கூறியிருந்தார். இதனை மறுத்து பேசிய கார்த்திக் சுப்பராஜ்  “அவங்க அழகா இல்லைனு நீங்க எப்டி சொல்றீங்க. உங்களுடைய பார்வையில் பிரச்சனை இருக்கிறது. யாரும் யாரையும் நீங்கள் அழகாக இல்லை என்று சொல்லும் உரிமை கிடையாது. அது ஒரு மிகப்பெரிய வன்முறை” என்று அந்த நபரைக் கண்டித்திருந்தது குறிப்பிடத் தக்கது.