Jigarthanda DoubleX First Review: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’  படத்தை பார்த்த நடிகர் தனுஷ் தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். 


கடந்த 2014 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜின் 2வது படமாக உருவானது ‘ஜிகர்தண்டா’. மதுரையில் கேங்ஸ்டராக திகழும் அசால்ட் சேதுவின் வாழ்க்கையை தனது படத்தின் கதைக்காக அறிந்து கொள்ள வரும் இளம் இயக்குநருக்குமான முட்டல்,மோதல் தான் இப்படத்தின் கதையாகும். இந்த படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா, அம்பிகா, சங்கிலி முருகன், குரு சோமசுந்தரம், கருணாகரன் என பலரும் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் அசால்ட் சேதுவாக நடித்த பாபி சிம்ஹாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. 


இந்நிலையில் 9 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” என்ற பெயரில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படமானது நாளை (நவம்பர் 10) உலகமெங்கும் வெளியாகிறது. முன்னதாக வெளியான டீசர், ட்ரெய்லர் என அனைத்தும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. 






இப்படம் தோல்விகளால் துவண்டு கிடக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோருக்கு கம்பேக் கொடுக்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை தான் பார்த்ததாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் பார்த்தேன். இது கார்த்திக் சுப்பராஜின் அற்புதமான படைப்பு. ராகவா லாரன்ஸின் சிறந்த நடிப்பு வெளிப்படும். எஸ்.ஜே.சூர்யாவின் பிரமிப்பான நடிப்பை பார்ப்பது தொடர்கதையாகி விட்டது. சந்தோஷ் நாராயணின் இசை அழகு. கடைசி 40 நிமிடம் உங்கள் இதயத்தை கொள்ளைக்கொள்ளும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.