கோலமாவு கோகிலாவின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான ’குட் லக் ஜெர்ரி’ வரும் ஜூலை 29ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் ரிலீசாக உள்ள நிலையில், நயன்தாரவுடன் தான் ஒப்பிடப்படுவது குறித்து ஜான்வி பதிலளித்துள்ளார்.


கோகிலா வேறு, ஜெர்ரி வேறு


இது குறித்து முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஒரே படம் என்றாலும் எங்கள் கதாபாத்திரங்கள் வேறு வேறு. ஜெர்ரி கதாபாத்திரம் நயன்தாரா கதாபாத்திரம் போன்றது அல்ல. நான் பஞ்சாப்பில் வசிக்கும் பிகாரி பெண்ணாக நடித்துள்ளேன். எனவே பேசும் விதம் தொடங்கி அனைத்தும் வேறாகவே இருக்கும்.


இந்த ஒப்பீடு ஒன்றும் எனக்குப் புதிதல்ல. என் முதல் படமான ’தடக்’ படமே மராட்டி படமான ’சாய்ராட்’ படத்தின் ரீமேக். அது முதலே என்னை ஒப்பிடுகிறார்கள்.


அம்மா போன்ற சிறந்த நடிகையுடன் ஒப்பீடு


என்றென்றும் திரையில் தோன்றிய மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவரான என் அம்மா ஸ்ரீதேவியுடன் நான் ஒப்பிடப்பட்டேன். என் கரியரின் ஆரம்பம் முதலே இந்த ஒப்பீடு என்னைத் துரத்துகிறது. நான் இதற்கு பழகிவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.


2018-ஆம் ஆண்டு தமிழில் வெளியான ’கோலமாவு கோகிலா’ படம் நயன்தாராவுக்கு மாஸ் ஹீரோக்களுக்கு இணையான வெற்றியை பெற்றுத் தந்தது. தொடர்ந்து இப்படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் தளம் பெற்றது. 


 






இந்நிலையில் முன்னதாக ’குட்லக் ஜெர்ரி’ ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ், கலர் எல்லோ புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மகாவீர் ஜெயின் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளன. இப்படத்தினை இயக்குனர் சித்தார்த் சென்குப்தா இயக்கியுள்ளார். ஜான்வி கபூருடன் தீபக் டொப்ரியல், மிட்டா வஷிஷ்ட், நீரஜ் சூட் உள்ளட்ட நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.