பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் மணிவிழா நேற்று கோவையில் நடைபெற்றது. தனது நெருங்கிய நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மணிவிழாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை தமிழ் திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ஜெயமோகன் அருண்மொழிநங்கை தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 






அந்த வாழ்த்து பதிவில், உறவென்று உயிர்த்த எழுத்தையும் அதன் உருவான உயிர் எழுத்தையும் ஆசிகள் வேண்டி, இந்த மணிவிழா தருணத்தில் தலைவணங்கி வாழ்த்துகிறேன் என இயக்குநர் சீனு ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.1991 ஆம் ஆண்டு தனது வாசகியாக இருந்த மதுரை வேளாண்மை கல்லூரி மாணவி அருண்மொழிநங்கையை திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு அஜிதன் என்ற மகனும், சைதன்யா என்ற மகளும்  உள்ளனர். மகன் அஜிதன் நாவலாசிரியர்,திரைப்படத்துறையில் பணியாற்று வருகிறார்.


ஜெயமோகன் பிரபல தமிழ் எழுத்தாளரும் நாவலாசிரியரும் ஆவார்.  தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் பிரபல நட்சத்திரங்கள் விக்ரம் சரத்குமார் ஜெயம் ரவி கார்த்தி ஐஸ்வர்யா ராய் த்ரிஷா பார்த்திபன் இணைந்து நடிக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30 ஆம்  தேதி வெளியாக இருக்கிறது.படக்குழுவினர் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஜெயமோகனின் கதைகளைத் தழுவி திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. 






சிம்பு நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் இவரது ஐந்து நெருப்பு கதையை தழுவி எடுக்கப்பட்டதாகும்.எதிர்பார்த்ததை போல படம் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது. 4 நாட்கள் முடிவில் வெந்து தணிந்தது காடு சுமார் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனைத் தொடந்து நேற்று படத்தின் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் எழுத்தாளர் ஜெயமோகன் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் அவர் தான் ஏன் கலந்து கொள்ளவில்லை என்றும், படம் குறித்தும் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். 




அதில்,  நேற்று கோவையில் என்னுடைய மணிவிழாவை நண்பர்கள் கொண்டாடியதால் வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் மானசீகமாக நான் உங்களுடன் தான் இருக்கிறேன் என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கடல், ஆர்யாவின் நான் கடவுள் ஆகிய திரைப்படங்களும் இவரது கதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்கள் ஆகும். தமிழில் மட்டுமின்றி மலையாளத்திலும் எழுதி வருகிறார்.