மோகன் ராஜா இயக்கி ஜெயம் ரவி , நயன்தாரா, அரவிந்த் சாமி இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைகின்றன.


புத்திசாலித்தனமான திரைக்கதை


 தனி ஒருவன் ரசிகர்களால் இன்றுவரை பாராட்டப் படுவதற்கு காரணம் வழக்கமான ஹீரோ வில்லன் கதையும் மிக புத்திசாலித்தனமான ஒரு திரைக்கதையும் இருப்பதால்தான். ஹீரோ வில்லன் என்று இரண்டு கதாபாத்திரங்களாக பார்க்காமல் இரண்டு ஐடியாக்களாக நாம் இந்தப் படத்தை பார்த்தோம் என்றால் ஒரு புதிய அனுபவம் நமக்கு கிடைக்கும்.


 நன்மை vs தீமை


எளிதாக புரிந்துகொள்வதற்காக தனி ஒருவன் படத்தின் கதையை நன்மை தீமை இரண்டுக்கும் இடையிலான மோதல் என்று வைத்துக் கொள்வோம். மித்ரன் (ஜெயம் ரவி ) நன்மை என்றால் சித்தார்த் அபிமன்யு (அரவிந்த் சாமி) தீமை. எப்படி நன்மைக்கு அதன் நியாயங்கள் கொள்கைகள் இருக்கிறதோ அதேபோல் தீமைக்கு அதன் நியாயங்கள் இருக்கின்றன. தனக்கு சரி என்று படுவதை எந்த வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் செய்கிறான் சித்தார்த். கிட்டத்தட்ட ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போல்தான் இருவரும். ஆனால் நன்மையை விட தீமைக்கு அதிக சலுகைகள் இந்த உலகத்தில் இருக்கின்றன. படத்தின் தொடக்கத்தில் ஒர் வழக்கமான புத்திசாலியான திறமைவாய்ந்த ஒரு கதாநாயகனாக அறிமுகமாகும் மித்ரன் சித்தார்த் முன்பு ஒரு சின்ன புழுவைப் போல் பலமற்றவன்தான் என்பதை தெரிந்தே வைத்திருக்கிறான். எல்லா விதத்திலும் தன்னை விட பல மடங்கு பலம் வாய்ந்த ஒரு எதிரியை தனக்காக அவன் தேர்ந்தெடுக்கிறான். ஒருவகையில் மித்ரன் தனக்கு இந்த சவாலை வைத்துக் கொள்வது அவனது தனிப்பட்ட ஈகோவிற்காகத்தான். உண்மைதான் கடைசியில் ஜெயிக்கும் என்று நம்பும் அவன் மனது அதனை சோதித்து பார்க்கவே அப்படி ஒரு எதிராளியைத் தேர்வு செய்கிறது.


 சித்தார்த் அபிமன்யு


ஒரு சுவாரஸ்யமான ஆக்‌ஷன் த்ரில்லர் படத்திற்கு மிக முக்கியமான ஒரு கதாபாத்திரம் படத்தின் வில்லன். ஆனால் எவ்வளவுதான் பலசாலியான ஒரு வில்லனாக இருந்தாலும் ஹீரோ என்று ஒருவன் இருந்தால் வில்லன் தோற்றுதான் ஆக வேண்டும் என்பது ஒரு கமர்ஷியல் சினிமாவில் எழுதப்பட்டுவிட்ட விதி. தோற்கத்தான் போகிறான் என்று தெரிந்தும் எப்படி அந்த வில்லனை பலசாலியாக காட்டவேண்டும் என்பதே இப்போது சவால். கடைசிவரை வீழ்த்தப்படாமல் இருக்கும் ஒரு வில்லனை சுட்டிக்காட்ட வேண்டும் என்றால் சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்தை உதாரணமாக சொல்லலாம். இன்னும் சொல்லப்போனால் இயக்குநர் மோகன் ராஜா ஒரு விளையாட்டுப் போல் இதை படம் முழுவதும் செய்து வருகிறார். மித்ரன் (ஜெயம் ரவி ) ஒரு  அடி எடுத்து வைத்தால் சித்தார்த் அபிமன்யு (அரவிந்த் சாமி ) இரண்டு அடிகள் எடுத்து வைப்பார். மித்ரன் இரண்டு அடி எடுத்து வைத்தால் சித்தார்த் நான்கு அடிகள் எடுத்து வைக்க வேண்டும் என்பதே விதி. அவனை ஜெயிக்க வேண்டும் என்றால் மித்ரன் சித்தார்த் அபிமன்யுவாக மாறவேண்டும். அவனை அவனது வழியில் மட்டுமே வீழ்த்த முடியும். அதைத்தான் செய்கிறார் கதாநாயகன். இந்த விளையாட்டின் உச்சபட்சமான சுவாரஸ்யம்  படத்தின் இறுதி காட்சி. தீமை என்பது எப்போதும் வெல்வதில் மட்டுமில்லை..  நன்மை தன்னைவிட உயர்ந்ததாக இருக்கும்போது  எதிராளியிடம் தோற்றுப் போவதையும் ஏற்றுக்கொள்வதே, அதன் நியாயம் என்பதை உணர்த்தும் வகையில் கடைசியில் தனது எல்லா ரகசியங்களையும் மித்ரனிடம் கொடுத்துவிட்டு உயிரிழக்கிறார் சித்தார்த் .


ரீமேக் ராஜா


தொடர்ச்சியாக ரீமேக் படங்கள் எடுத்துவந்த இயக்குநர் மோகன் ராஜாவிற்கு ரீமேக் ராஜா என்கிற பெயரை சூட்டியிருந்தது ரசிகச் சமூகம். அதை எல்லாம் உடைத்து இப்படியான ஒரு உதாரணம் காட்டி சொல்லும் அளவிற்கான ஒரு திரைக்கதையை அமைத்து தனது அடையாளத்தை உருவாக்கினார் மோகன் ராஜா.