பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் ஷாகித் கபூர். தொடக்க காலத்தில் பாலிவுட் திரையுலகின் சாக்லேட் பாயாக வலம் வந்த ஷாகித் கபூர், சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
ஹிந்தியில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அர்ஜூன்ரெட்டி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மீண்டும் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ஜெர்ஸி படத்தின் ரீமேக்கில் நடித்தார் ஷாகித்கபூர். கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த படம், வரும் 31-ந் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த மேக்கிங் வீடியோவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஷாகித்கபூர் படத்திற்காக தீவிர பேட்டிங் பயிற்சி எடுப்பது உள்ளது. அதே வீடியோவில் பயிற்சியின்போது பந்து தாக்கியதில் ஷாகித்கபூரின் உதட்டில் பலத்த காயம் ஏற்பட்டு, அவரது வாயில் இருந்து ரத்தம் ஊற்றுகிறது. மேலும், துண்டை வைத்து அழுத்தியும் ரத்தம் நிற்காமல் வருவதும், ரத்தம் அவரது ஜெர்ஸி முழுவதும் ஊற்றியிருப்பதும் அவரது ரசிகர்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கி உள்ளது. பின்னர், ஷாகித் கபூருக்கு 25 தையல்கள் போடப்பட்டது.
பின்னர், கொரோனா தொற்றுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஷாகித் கபூர் நாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில் நாயகியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். இந்த படத்தை கவுதம் தின்னானுரி இயக்கியுள்ளார். அனில் மேதா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்திற்கு சச்சிட் டாண்டன், பரம்பரா தாக்கூர் இருவரும் இசையமைத்துள்ளனர். பங்கஜ் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அமன்கில், தில் ராஜூ, நாக வம்சி ஆகியோர் தயாரித்துள்ளனர்.
2019ம் ஆண்டு தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெர்ஸி. இந்த படத்தை அப்படியே ஹிந்தியில் தற்போது ரீமேக் செய்துள்ளனர். தெலுங்கு படத்தை இயக்கிய கவுதம் தின்னானுரிதான் ஹிந்தியிலும் இயக்கியுள்ளார். கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் நானியின் திரை வாழ்வில் முக்கிய படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: குட்டிகுரங்கை கொன்ற நாய்கள்.. பழிவாங்குவதற்காக சுமார் 250 நாய்க்குட்டிகளை கொன்ற குரங்குகள்.. என்ன நடக்கிறது பீட் மாவட்டத்தில்?