கோடியில் வசூலை அள்ளிய படங்கள்:
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. இவர் நடித்த முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பலரையும் திரும்பி பார்க்க வைத்ததோடு கோடிகளில் வசூலை அள்ளி தந்தது ஜெயம் படம். இதன் மூலம் ஜெயம் ரவி என்று அறியப்பட்ட இவர் நடித்த தனிஒருவன், எம்.குமரன் S/O மகாலெட்சுமி, அடங்க மறு, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை, கோமாளி, நிமிர்ந்து நில் உள்ளிட்ட பல படங்களும் கோடிகளில் வசூலை தந்தது. தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக இருக்கும் ஜெயம் ரவிக்கு கடந்த சில காலங்களாக படங்கள் பெரியதளவில் வெற்றியை தேடி தரவில்லை. குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் வெளிவந்த இறைவன், சைரன் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.
ஜெயம் ரவியின் லைன் அப் படங்கள்:
இதற்கிடையில் தற்போது ஜெயம் ரவி சுவாரசியமான பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். குறிப்பாக ”வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ்” நிறுவனம் மூலம் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் அர்ஜுனன் இயக்கத்தில் வெளியாக உள்ள ’ஜீனி’ படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்திற்கு பின் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் எட்டாவது தயாரிப்பில் அனைத்து ரசிகர்களும் கண்டு மகிழும் வகையில் கலகலப்பான குடும்ப படமாக ராஜேஷ் இயக்கத்தில் ’பிரதர்’ படம் உருவாகி வருகிறது. அதேபோல கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை, மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 ஆகிய படங்களும் வரிசையில் உள்ளது.
பிரதர் அனவுன்ஸ்மண்ட் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்:
பிரதர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், அதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது. இதன் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் அறிவிப்பு வீடியோவும் வெளியாகியுள்ளது. ஸ்கிரீன் செவன் தயாரிப்பில் பிரியங்கா மோகன், பூமிகா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் திரைக்கு வரவுள்ளது. ஒரு கல் ஒரு கண்ணாடிக்கு பிறகு இயக்குநர் ராஜேஷ், இசையமைப்பாளர் ஹாரிஸ் மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் பாடல்கள் மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. 38 நொடிகள் ஓடும் வீடியோ வெளியான நிலையில் இது ஹாரிஸ் ஜெயராஜின் கம்பேக் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. படத்தின் டிஜிட்டல் மட்டும் சாட்டிலைட் உரிமையை 37 கோடி ரூபாய் கொடுத்து ஜீ தமிழ் மற்றும் ஜீ 5 நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் வாங்கியுள்ளது. அதை வீடியோ மூலம் யூடிப்பில் வெளியிட்டனர். இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஜெயம் ரவியின் வெற்றி படங்களின் வரிசையில் இந்த படமும் அமையும் என்றும் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.