ஜெயம், எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், பேராண்மை, எங்கேயும் காதல், தனி ஒருவன், கோமாளி உள்ளிட்ட வித்தியாசமான கதை கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் ஜெயம் ரவி. தமிழ் சினிமாவின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் மணிரத்னத்தின் அருண்மொழிவர்மனாக நடித்து இருந்தார். ஜீனி, பிரதர், காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
அன்பான திருமண வாழ்க்கை
சினிமா வாழ்க்கையை போல் தனிப்பட்ட சொந்த வாழ்க்கையும் சிறப்பாகவே இருந்து வந்தது. 2009 ஆம் ஆண்டில் ஆடை வடிவமைப்பாளர் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரவி. இருவருக்கும் ஆரவ், அயான் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் ஆர்த்தி, ஜோடியாக எடுக்கும் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர். ஜெயம் ரவியும் அப்படிதான். சினிமா நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்ளும் இந்த ஜோடி ஒருவரை ஒருவர் அன்புடன் கிண்டல் செய்யும் வீடியோக்களும் அவ்வப்போது வைரலாகும். இப்படியான இனிமையான திருமண வாழ்வில், திடீரென ஒரு நாள் ஆர்த்தி ஜோடியாக எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் நீக்கிவிட்டார். இதனால், இவருக்கும் இவர் மனைவிக்கும் இடையே ஏதோ ஒரு மனஸ்தாபம் ஏற்பட்டுவிட்டதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.
இந்நிலையில், ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்து யோசித்த பின்னர் மனைவி ஆர்த்தியை பிரிய முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜெயம் ரவி கொடுத்த விளக்கம் :
“வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம். ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமூக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.
நீண்டகால யோசனை மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது.
இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும் இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே.
நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரலை நன்றியுடன் உணர்கிறேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி.” என ஜெயம் ரவி தனது அறிக்கையில் விரிவான விளக்கத்தை கொடுத்துள்ளார்.
காரணம் இதுதானா?
ஜெயம் ரவி நடிக்கும் படங்களில், ஆர்த்தி மற்றும் அவரது வீட்டாரின் தலையீடு அதிகமாக உள்ளதாகவும், தனிப்பட்ட இந்த காரணங்களால் சினிமாவில் பெரும் வெற்றி காணமுடியாத சூழ்நிலையால், இந்த குழப்பம் விவாகரத்தில் முடிந்துவிட்டதாக சமூக வலைதள தகவல்கள் தெரிவிக்கின்றன.