ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தின் காட்சிகளை திருடி இணையத்தில் வெளியிட்ட புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்திருக்கும் படம் ஜவான். தமிழில் விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கி இருந்த அட்லீ முதன் முதலாக இந்தி திரையுலகில் தடம் பதித்துள்ளார். தனது முதல் படமே ஷாருக்கானை வைத்து எடுத்திருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அட்லீ போல் முதன் முதலாக பாலிவுட்டில் எண்ட்ரி கொடுக்கும் அனிரூத் ஜவான் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
ஜவானில் ஷாருக்கானிற்கு ஜோடியாக நயன்தாராவும், வில்லனாக விஜய் சேதிபதியும் நடித்துள்ளனர். இவர்களை தவிர ஜவான் படத்தில் பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 7ம் தேதி திரைக்கு வரைவதை ஒட்டி புரோமோஷன் வேலையாக டீசர், மோஷன் போஸ்டர்ஸ், பாடல் உள்ளிட்டவற்றை படக்குழு வெளியிட்டது. அண்மையில் ஷாருக்கான் நடனத்தில் வெளியாகி டிரெண்டிங்கில் முதலிடம் இருந்த வந்த எடம் பாடலின் மேக்கிங் வீடியோவையும் படக்குழு பகிர்ந்தது. அதில், ஷாருக்கானிற்கு அட்லீ தமிழ் சொல்லி தருவதை ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்தனர்.
இந்த நிலையில் ஜவான் படத்தின் காட்சிகளை திருடி விட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில், பிரமாண்டமாக எடுக்கப்பட்ட ஜவான் படத்தின் காட்சிகள் ரிலீஸ் தேதிக்கு முன்னதாக வெளியாக கூடாது என்பதில் படக்குழு கவனமாக இருந்ததாகவும், அதனால் ஷீட்டிங்கின் போது படக்குழுவினர் யாரும் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இப்படி இருக்கையில் யாருரோ சிலர் ஜவான் படத்தின் காட்சிகளை திருடியது மட்டும் இல்லாமல், படத்தின் உரிமையாளர் அனுமதி இல்லாமல் டிவிட்டரில் பகிர்ந்துள்ளதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வீடியோ லீக் ஆனது குறித்து ஜவான் படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சாண்டாக்ரூஸ் போலீசார், சந்தேகப்படும்படியான டிவிட்டர் கணக்கு வைத்திருப்போரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். படத்தின் ரிலீசுக்கு முன்னதாக அதன் காட்சிகளை திருடிவிட்டதாக தயாரிப்பு நிறுவனமே புகார் அளித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பதான் படத்திற்கு ஷாருக்கானின் பான் இந்தியா படமாக உருவாகி இருக்கும் ஜவான் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. முன்னதாக டீசரில் வெளியான அதிரடி ஆக்ஷன் காட்சிகள் ஜவான், பதான் படத்தை போல் இருக்கும் என விமர்சிக்கப்பட்டு வருகிறது. பதான் படம் வெளியாகும்போது, அதன் பாடல் காட்சிகளில் இடம்பெற்றிருந்த ஆடையின் நிறத்திற்கு எதிராக ஒரு தரப்பினர் புகார் அளித்தனர். பதான் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். தற்போது ரிலீசுக்கு முன்னதாகவே, ஷாருக்கானின் ஜவான் படம் நீதிமன்றம் வரை சென்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.