பாலிவுட் திரையுலகின் சூப்பர்ஸ்டார் ஷாரூக்கான். இவர் நடிப்பில் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் அட்லீ இயக்கியுள்ள திரைப்படம் ஜவான். அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது முதலே பெரும் பரபரப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. படத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி என்று நட்சத்திர பட்டாளங்கள் குவிந்ததும், படத்தின் பர்ஸ்ட் லுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியாகியுள்ளது. ட்ரெயிலர் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
அட்லீ - ஷாரூக்கான்:
பாலிவுட் பாதுஷா என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாரூக்கான் கடந்த சில ஆண்டுகளாக எந்த ஹிட்டும் கொடுக்காமல் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 25-ந் தேதி அவரது நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் ஒட்டுமொத்த இந்தி திரையுலகிற்குமே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பதான் வெற்றியை தொடர்ந்து ஷாரூக்கான் ரசிகர்களும், பாலிவுட் ரசிகர்களும் அட்லீ இயக்கத்தில் ஷாரூக் நடிக்கும் ஜவான் படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், இன்று ஜவான் படத்தின் ட்ரெயிலர் ரிலீசாகியுள்ளது.
நயன்தாரா, விஜய் சேதுபதி:
நான் யார்..? ஹீரோவா? வில்லனா? நான் வில்லனா வந்து நின்னா என் முன்னாடி எந்த ஹீரோவும் நிக்க முடியாது ராஜா அப்படி என்று மிரட்டும் வசனங்கள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. நயன்தாரா, விஜய் சேதுபதி கோலிவுட்டில் கோலோச்சும் நட்சத்திரங்கள் இருப்பது தென்னிந்திய ரசிகர்களுக்கு மிகுந்த ஆர்வத்தை தூண்டியுள்ளது.
ட்ரெயிலரில் மிரட்டும் சண்டைக்காட்சிகள், அனிருத்தின் இசை பக்காவான ஆக்ஷன் திரைப்படமாக ஜவான் உருவாகியிருப்பதை உணர்த்தியுள்ளது. குறிப்பாக, படத்தின் இறுதியில் மொட்டை அடித்த ஷாரூக்கான் ரயிலில் ஏறுவது அனைத்து ரசிகர்களையும் குஷிப்படுத்தியுள்ளது. பதான் படத்தை போலவே மிரட்டலான ஆக்ஷன் திரைப்படமாக ஜவான் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
அட்லீ முதன் முதலில் இந்தியில் இயக்கியுள்ள இந்த படத்தை ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. இந்த படம் இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிகளில் வரும் 7-ந் தேதி வெளியாக உள்ளது.