பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து, தான் இயக்கிய முதல் படமான ராஜா ராணியிலே பெயரையும் புகழையும் தட்டிச்சென்றவர் இயக்குநர் அட்லீ. அதன் பின், தமிழ்நாட்டின் உச்ச நட்சத்திரமான விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என பல ஹிட்களையும் கொடுத்தார். கோலிவுட்டிலிருந்து சற்று விலகி பாலிவுட்டி திரையுலகில் கால் தடம் பதித்துள்ளார் அட்லீ. 


இவர் இயக்கும் ஜவான் படத்தில் பாலிவுட் பாட்ஷா என்றழைக்கப்படும் ஷாருக்கான் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், தங்கல் புகழ் சன்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகி பாபு ஆகியோரும் நடிக்கின்றனர்.


வெளியானது ஜவான் ட்ரெய்லர்!




முன்னதாக இப்படத்தின் டீசர் வெளியாகிருந்த நிலையில், தற்போது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் எடுத்தவுடன் ‘நான் யாரு..யாரா இருக்கும்..தெரியலையே..எங்க அம்மாக்கு பண்ண சத்தியம்தான் நானு. இல்லை..பழிவாங்கணும் என்ற கோபமா? நான்புண்ணியமா? பாவமா? ஹீரோவா? வில்லனா? இத்தனை கேள்வியும் உங்களுக்குள்ள ஓடிட்டு இருக்குல? பதில் உங்களுக்குள்ள வச்சிக்கிட்டு என் கிட்ட தேடினா எப்படி? ஏனால், நீங்கதான் நான்....ரெடி!’என கேள்விக்குகளுக்கு மேல் கேள்வி கேட்டு கடைசியில் அவரே பதில் சொல்லிக்கொள்கிறார் ஷாருக்கான். 



டைட்டில் கார்டிற்கு பின் சார்மிங் விண்டேஜ் ஷாருக்கானை பார்க்க முடிகிறது. பின்னர் புடவையிலும் ஹாலிவுட் ரேஞ்சிற்கு கோட் சூட் அணிந்தும் வெவ்வேறு லுக்கில் அசத்துகிறார் நயன்தாரா. இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி, கேமியோ ரோலில் நடிக்கும் தீபிகா படுகோன், பிரியா மணி, சன்யா மல்ஹோத்ரா ஆகியோர் இருக்கும் குட்டி குட்டி க்ளிம்ஸ் காட்சிகள் இடம்பெறுகின்றன. கடைசியாக ஷாருக்., “நான் வில்லன முன்னாடி வந்து நின்னா..ஏன் முன்னாடி எந்த ஹீரோவும் நிக்க முடியாது ராஜா..” என மாஸ் வசனம் பேசுகிறார் 


ட்ரெய்லர் எப்படி ?




அங்கங்கு வரும் க்ளோஸ் அப் ஷார்ட்டுகளும், வித்தியாசமான சண்டை காட்சிகளும் கதைக்கேற்ற பின்னணி இசையும் அட்லீயின் ஜவானை சற்று வித்தியாசமாகதான் காண்பிக்கிறது. இப்போது வெளியான ப்ரிவ்யூவை பார்க்கும் போது இது ஒரு பக்கவான பாலிவுட் ஆக்‌ஷன் கமர்ஷியல் திரில்லர் என தெரிகிறது. இருப்பினும் இதன் கதைகளத்தை யூகிக்க முடியவில்லை. படம் வெளியாக இன்னும் பல வாரங்கள் உள்ள நிலையில், மீண்டும் ஒரு ட்ரெய்லரை எதிர்ப்பார்க்கலாம். அப்படி அது வெளியானால் ஜவான் எதைப்பற்றிய கதை என்று தெரிந்து விடும்.


ஷாருக்கின் மாஸ் வசனம் :


ஷாருக்கின் பெரும்பாலான படங்களிலும் ‘நாம் தூ சுனா ஹோகா’ என்ற வசனம் இடம்பெற்று இருக்கும். நாம் தூ சுனா ஹோகா என்றால் “என் பெயரை கேள்வி பட்டுருப்பீங்க” என பொருள் படும். இதே வசனம் ஹிந்தியில் வெளியான ஜவான் ப்ரிவ்யூவில் இடம்பெற்றுள்ளது.


விஜய் ஜவானில் நடித்திருக்கிறாரா?




இப்படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியான சமயத்தில் விஜய் இதில் நடிக்கவிருக்கிறார் என பேச்சு அடிப்பட்டது. அதனையடுத்து ஷாருக், விஜய், அட்லீ ஆகிய மூவரும் நேரில் சந்தித்து கொண்டனர். பின், விஜய் குறித்த ஷாருக்கானின் ட்வீட் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையாக அமைந்தது.


இன்று வெளிவந்த ப்ரிவ்யூவில், குறிப்பாக 0:35 நிமிடங்களில் விஜய் ஒருவரை ஸ்மாக் போடுகிறார் என இணையத்தில் ரசிகர்கள், தங்களின் கருத்தை பதிவிட்டு வருகின்றனர். உற்று பார்க்கையில் லியோ பட லுக்கில் விஜய் இருப்பது போல் தெரிகிறது. ஆனால், அது நிஜமாகவே விஜய்தானா என்பதும் கன்ஃபார்ம் ஆகவில்லை.


அட்லீ - அனிருத் காம்போ : 




 “அந்நியன் படத்தில் வரும் பாதி பெயிண்ட் அடித்த லுக்கும், சிவாஜி படத்தில் வரும் ரஜினியின் மொட்டையும்,  பாகுபலியில் குழந்தையை தாங்கும் காட்சியும், ஜவானில் காணமுடிகிறது. எப்போதாவது காப்பி அடித்தால் பரவாயில்லை எப்போதுமே காப்பி அடித்தால் எப்படி ?” என்றும் “முதல் முறையாக காப்பி அடிக்கும் இசையமைப்பாளரும் இயக்குநரும் ஒன்றிணைந்துள்ளனர்” என அநியாயத்திற்கு நெட்சன்ஸ் வழக்கம் போல் ட்ரால் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.