ராஜா ராணியில் தன் பயணத்தைத் தொடங்கி, நடிகர் விஜய்யை வைத்து சூப்ப்ர் ஹிட் படங்களை இயக்கி, தற்போது கோலிவுட் டூ பாலிவுட் பயணித்து கிங் கான் எனப் போற்றப்படும் ஷாருக்கானுடன் கூட்டணி வைத்து பாலிவுட்டில் கால் பதிக்கிறார் அட்லீ.
தான் படம் இயக்குவதுடன் கோலிவுட்டில் இருந்து ஒரு நட்சத்திரப் பட்டாளத்தையே பாலிவுட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார் அட்லீ. அந்த வகையில் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க, மற்றொரு ஹீரோயினாக நடிகை தீபிகா படுகோன் நடிக்கிறார்.
பாலிவுட்டில் ஏற்கெனெவே ஒரு சில படங்களில் பணியாற்றி வரும் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்கும் நிலையில், பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பல கோலிவுட் ஸ்டார்களும் இப்படத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
செப்டெம்பர் 7ஆம் தேதி இப்படம் வெளியாகும் நிலையில், சமீபத்தில் ‘ஜவான்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. தொடர்ந்து நயன்தாராவின் கேரக்டர் போஸ்டரை படக்குழு பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில், தற்போது மற்றொரு அப்டேட்டை படக்குழு பகிர்ந்துள்ளது.
அதன்படி நடிகர் விஜய் சேதுபதியின் கேரக்டர் போஸ்டரை ஜவான் படக்குழு தற்போது பகிர்ந்துள்ளது. “இவரைத் தடுக்கவே முடியாது... இல்லை முடியுமா... பார்க்கலாம்” எனக் குறிப்பிட்டு நடிகர் ஷாருக்கான் பகிர்ந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகும் நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதியின் இந்த போஸ்டர் இணையத்தில் வரவேற்பைப் பெற்று லைக்ஸ் அள்ளி வருகிறது.
பாலிவுட்டில் இதற்கு முன்னடாக ஃபார்சி வெப் சீரிஸில் நடித்திருந்த விஜய் சேதுபதி, தொடர்ந்து மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கான மும்பைக்கார் படத்திலும் நடித்திருந்தார்.
மேலும் விஜய் சேதுபதி, பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப் உடன் நாயகனாக நடித்துள்ள ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
2019ஆம் ஆண்டு தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் பாலிவுட் ரசிகர்களையும் கவர்ந்த விஜய் சேதுபதி, தொடர்ந்து இந்தி சினிமாவில் நேரடியாகக் கால் பதித்து கலக்கி வருகிறார்.
மேலும் ரஜினிகாந்த், விஜய், கமல்ஹாசன் என முன்னணி தமிழ் நடிகர்களுக்கு வில்லனாக நடித்ததைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கும் வில்லனாக விஜய் சேதுபதி களமிறங்கியுள்ளார்.