எண்ணும் எழுத்தும் திட்ட மதிப்பீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பயிற்சிப் புத்தகங்கள்‌ மூலம்‌ கற்பிக்க கட்டாயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசுப்பள்ளி ஆசிரியர் குப்பண்ணன் என்பவர் பணியில் இருந்து விலகி உள்ளார். இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்று  வட்டாரக்‌ கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

எண்ணும் எழுத்தும் திட்டம்

கொரோனா பெருந்தொற்றினால்‌ மாநில அளவில்‌ ஏற்பட்ட கற்றல்‌ இடைவெளியை சரிசெய்ய, 2022 - 2023ஆம்‌ கல்வியாண்டு முதல்‌ தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும்‌ திட்டம்‌ நடைமுறைப் படுத்தப்பட்டது. இதன்படி 2025 ஆம்‌ கல்வி ஆண்டிற்குள்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள 8 வயதிற்குட்‌பட்‌ட அனைத்து குழந்தைகளும்‌ எண்ணறிவு மற்றும்‌ எழுத்தறிவு பெற வேண்டும்‌ என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்‌டுள்ளது.

4, 5ஆம் வகுப்புக்கு விரிவாக்கம்

எண்ணும்‌ எழுத்தும்‌ திட்டமானது 2022 - 2023 ஆம்‌ கல்வியாண்டில்‌ 1 முதல்‌ 3 ஆம்‌ வகுப்பு வரை நடைமுறைப் படுத்தப்பட்டது. 2023 - 2024 ஆம்‌ கல்வியாண்டில் இருந்து 4 மற்றும்‌ 5 ஆம்‌ வகுப்பிற்கு மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

Continues below advertisement

கல்லூரி மாணவர்களைக் கொண்டு தர மதிப்பீடு

எண்ணும்‌ எழுத்தும்‌ திட்டம்‌ அனைத்துப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ 1 முதல்‌ 3 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் நபர்‌ மதிப்பீடு (Third Party evaluation) மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. இம்மதிப்பீட்டினை மேற்கொள்ள அரசு, அரசு உதவிபெறும்‌ மற்றும்‌ தனியார்‌ கல்வியியல்‌ (பி.எட்.) கல்லூரிகளில்‌ பயிலும்‌ முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களை‌ மதிப்பீட்டாளராக (Enumerators) பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக இம்மாணவர்களுக்கு மதிப்பீட்டினை மேற்கொள்வதற்கான பயிற்சி அனைத்து மாவட்ட ஆசிரியர்‌ கல்வி மற்றும்‌ பயிற்சி நிறுவனங்களில்‌ 28.08.2023 முதல்‌ 31.08.2023 வரை இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது.

எனினும் இதற்கு ஆசிரியர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எண்ணும் எழுத்தும் திட்டத்தினை மூன்றாவது நபர் மதிப்பீடு (Third party evaluation)  செய்யும் முறையினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளரும் தனிக்கவனம் மேற்கொண்டு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.

நேரில் ஆஜராகி விளக்கம்

இந்த நிலையில் எண்ணும் எழுத்தும் திட்ட மதிப்பீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பயிற்சிப் புத்தகங்கள்‌ மூலம்‌ கற்பிக்க கட்டாயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசுப்பள்ளி ஆசிரியர் குப்பண்ணன் என்பவர் பணியில் இருந்து விலகி உள்ளார். இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்று  வட்டாரக்‌ கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர் குப்பண்ணணுக்கு, கொல்லிமலை வட்டாரக்‌ கல்வி அலுவலர் கடிதம் அனுப்பி உள்ளார். அந்தக் கடிதத்தில் கூறி உள்ளதாவது:

நாமக்கல்‌ மாவட்டம்‌, கொல்லிமலை ஒன்றியம்‌, ஆலத்தூர்நாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்‌ பள்ளியில்‌ இடைநிலை ஆசிரியராக பணியாற்றிய கு.க.குப்பண்ணன்‌ என்பவர்,‌ 1- 5 வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன்‌ மூலம்‌ மதிப்பீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்‌, தனித்தனி வகுப்புகளாக பாட நூல்கள்‌ மூலம்‌ கற்பிக்காமல்‌ வகுப்புகளை ஒன்றிணைத்து பயிற்சிப் புத்தகங்கள்‌ மூலம்‌ கற்பிக்க கட்டாயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்‌ தனது ஆசிரியர்‌ பணியில் இருந்து 07.06.2023 முற்பகல்‌ முதல்‌ விலகிக்‌ கொள்கிறேன்‌ என்று தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக நாமக்கல்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலருக்கு (தொடக்கக்‌ கல்வி) கடிதம் அனுப்பி உள்ளார். இதற்கு, சம்மந்தப்பட்ட ஆசிரியரை விசாரணை செய்து, பணியிலிருந்து விலகும்‌ பட்சத்தில்‌ உரிய கருத்துருக்களுடன்‌ அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இடைநிலை ஆசிரியர்‌ ஆசிரியர்‌ பணியிலிருந்து 07.06.2023 முற்பகல்‌ முதல்‌ விலகிக்‌ கொள்கிறேன்‌ என்று குப்பண்ணன்‌‌ தெரிவித்ததற்கு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால்‌ கொல்லிமலை வட்டாரக்‌ கல்வி அலுவலகத்தில் நேரில்‌ ஆஜராக வேண்டும் என்று சம்பந்தப்பட்ட ஆசிரியர்‌ கேட்டுக் கொள்ளப்படுகிறார்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.