தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களைப் பற்றிய தனது கருத்துக்களை வெளிப்படையாக பேசியுள்ளார் பிரியாமணி.


பிரியாமணி


பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பிரியாமணி. தொடர்ந்து பாலுமகேந்திரா இயக்கிய அது ஒரு கனா காலம் படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், இந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரியளவில் பாராட்டுக்களைப் பெற்றது.


தமிழில் அவர் நடித்த இரண்டு படங்களும் தோல்வியடைந்தாலும் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் அவர் நடித்த படங்கள் நல்ல வெற்றிகளை வழங்கின. பின் 2006ஆம் ஆண்டு அமீர் இயக்கிய பருத்தி வீரன் திரைப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்தார் பிரியாமணி.


முத்தழகு என்கிற கதாபாத்திரத்தின் நடித்த பிரியாமணி அந்த கதாபாத்திரத்தில் வேறு யாரையும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு தனது நடிப்பால் அசத்தியிருந்தார். மேலும் இந்தப் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றார் பிரியாமணி. மலையாளப் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்த பிரியாணிக்கு இதன் பிறகு குறிப்பிட்டு சொல்லும் படையான கதைக்களங்கள் அமையவில்லை.


ஜவான்


 இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜவான் திரைப்படத்தில் பிரியாமணி நடித்துள்ள கதாபாத்திரம்  அனைவரிடமும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் லக்‌ஷ்மி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரியாமணி. ஜவான் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது.  இந்நிலையில் நடிகை பிரியாமணி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது திரையனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களைப் பற்றிய தனது கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.


கார்த்தி


அப்போது பருத்திவீரன் படத்தில் பிரியாமணியுடன் இணைந்து நடித்து நடிகர் கார்த்தி குறித்து பேசிய அவர், “கார்த்தி ஒரு சிறந்த நண்பர்“ என்று கூறினார்.


 நாகர்ஜுனா


 2010ஆம் ஆண்டு வெளியான ரகடா என்கிற தெலுங்குப் படத்தில் நடிகர் நாகர்ஜூனாவுடன் இணைந்து நடித்தார் பிரியாமணி. நாகர்ஜூனாவை வசீகரமானவர் என்று பிரியாமணி குறிப்பிட்டார். ’நாகர்ஜூனாவுடன் இணைந்து பணியாற்றியவர் அல்லது அவரை தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்கள் அனைவரும் அவரை வசீகரமானவர் என்றுதான் விவரிப்பார்கள் என்று  நினைக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.


ரஜினிகாந்த்


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்திரா விட்டாலும் ரஜினி என்றதும் தலைவா என்கிற வார்த்தையால் அவரைக் குறிப்பிட்டு பேசியுள்ளார். “ தலைவா என்றால் கடவுள் ரஜினி கடவுள் மாதிரி” என்றார்.


நடித்து வரும் படங்கள்


ஜவான் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பிரியாமணி நடித்திருக்கும் திரைப்படம் மைதான். அஜய் தேவ்கன்,  நிதான்ஷி கோயல் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தை அமித் ஷர்மா இயக்கியுள்ளார்.


இதனைத் தொடர்ந்து ராஜ் மற்றும் டி கே இயக்கிய புகழ்பெற்ற இந்தித் தொடரான ‘த ஃபேமிலி மேன்’ தொடரின் மூன்றாவது சீசனில் சுசித்ரா திவாரி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க இருப்பதாக அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஜீது ஜோசப் இயக்கிவரும் மலையாளப் படமான நேரு படத்தில் மோகன்லாலுடன் இணைந்து  நடித்து வருகிறார் பிரியாமணி.