பாலிவுட்டில் ஒரே திரைப்படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து புகழின் உச்சத்துக்குச் சென்ற நடிகை ஜாஸ்மின் துன்னா, திடீரெனத் திரையுலகை விட்டு விலகியது இன்றளவும் பேசப்படும் மர்மங்களில் ஒன்றாக உள்ளது.

Continues below advertisement

யார் இந்த ஜாஸ்மின் துன்னா?

1979ஆம் ஆண்டு வெளியான ‘சர்காரி மெஹ்மான்’ (Sarkari Mehmaan) திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஜாஸ்மின் துன்னா. அப்போது அவருக்கு வயது வெறும் 13. அந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னாவுடன் இணைந்து நடித்தார். படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், ஜாஸ்மினின் தோற்றன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

Continues below advertisement

ஒரே படத்தில் உச்சம்

பல ஆண்டுகளுக்குப் பிறகு, 1988ஆம் ஆண்டு வெளியான ‘வீரானா’ (Veerana) திரைப்படம் ஜாஸ்மினின் வாழ்க்கையையே மாற்றியது. ஷியாம் ராம்சே, துளசி ராம்சே ஆகிய ராம்சே சகோதரர்கள் இயக்கிய இந்தத் திகில் திரைப்படத்தில், தீய சக்தியால் ஆட்கொள்ளப்படும் பெண்ணாக நடித்தார் ஜாஸ்மின். அவரது தோற்றம், கண்களின் வழியாக வெளிப்படுத்திய நடிப்பு, படத்தின் திகில் காட்சிகள் என அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இவையனைத்தை காட்டிலும் இப்படத்தில் ஜாஸ்மின் துன்னா நடித்த க்ளார்மர் காட்சிகள் ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தன. 1988 ஆம், ஆண்டு வெளியான இப்படம் 3 கோடி வசூல் செய்து ஹாரர் பட ஜானரில் சாதனை படைத்தது. 

ஆபத்தாக மாறிய கவர்ச்சி

‘வீரானா’ வெற்றிக்குப் பிறகு ஜாஸ்மினுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. ஆனால் அவரது கவர்ச்சிகரமான நடிப்பே அவரது உயிருக்கே ஆபத்தான சூழலை உருவாக்கியது. பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் ஜாஸ்மின் துன்னாவின் அழகில் மயங்கியதாகவும் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. தாவூத் இப்ராஹிமின் ஆட்கள் ஜாஸ்மினை எல்லா நேரங்களிலும் பிந்தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது. 

பாலிவுட் சினிமாவில் அடுத்த சூப்பர்ஸ்டார் என பலரும் எதிர்பார்த்து வந்த ஜாஸ்மின் எல்லா புகழையும் விட்டுவிட்டு திடீரென காணாமல் போனார். ஒரே படத்தில் உச்சத்திற்கு சென்ற ஜாஸ்மின் திடீரென தடயமின்றி மாயமானது ஒட்டுமொத்த திரையுலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் கடத்தப்பட்டதாகவும் , கொலை செய்யப்பட்டதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின. ஆனால் தனது உயிருக்கு பயந்த ஜாஸ்மின் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதாக சில தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இன்று வரை அவரைப் பற்றிய உறுதியான தகவல் கிடைக்கவில்லை.