ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனும் படத்தைப் பாராட்டியுள்ளார். ‘ஜெயிலர் 2’ ஒரு சிறந்த கமர்ஷியல் என்டர்டெய்னர் என்றும், படம் முழுவதும் ரசிகர்களை உற்சாகத்தில் வைத்திருப்பதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். ரஜினிகாந்தின் ஸ்டைல், திரை ஆளுமை மற்றும் எனர்ஜியை பாராட்டிய அல்லு அர்ஜுன், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரையும் பாராட்டியுள்ளார். ஆனால் இந்த பதிவில் அல்லு அர்ஜூன் குறிப்பிட்டுள்ள ஒரு வரி ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. 

Continues below advertisement

வாழ்த்தா ? வஞ்சமா

ஜெயிலர் 2 படத்தை பாராட்டி அல்லு அர்ஜூன் பதிவிட்டிருந்தாலும் இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ள ஒரு வரியை ரசிகர்கள் தவறாக புரிந்துகொள்வதற்கான சாத்தியங்கள் உள்ளன. தனது பதிவில் அல்லு அர்ஜூன் " சட்டைகூட கசங்காமல் 500 கோடி வசூல் செய்ய முடியும் என்றால் சூப்பர்ஸ்டாரால் தான் முடியும் " என்று கூறியுள்ளார். இந்த வரியை குறிப்பிடும் ரசிகர்கள் இது வாழ்த்தா இல்லை வஞ்சமா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

7 நாட்களில் ரூ.582 கோடி வசூல்

வெளியான முதல் நாளிலேயே இந்தியாவில் ரூ.59.70 கோடி நெட் வசூலித்த ‘ஜெயிலர் 2’, முதல் வாரத்தில் தொடர்ந்து வலுவான வசூலை பதிவு செய்தது. 7-வது நாளான அக்டோபர் 21ஆம் தேதி இந்தியாவில் ரூ.28.15 கோடி நெட் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த நெட் வசூல் ரூ.317.20 கோடியாகவும், இந்திய கிராஸ் வசூல் ரூ.371.45 கோடியாகவும் உயர்ந்துள்ளது. வெளிநாட்டு வசூல் சுமார் ரூ.211 கோடியாக இருப்பதாகவும், உலகளவில் இதுவரை ரூ.582.45 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ.600 கோடி உலகளாவிய வசூல் என்ற அடுத்த முக்கிய மைல்கல்லை நோக்கி ‘ஜெயிலர் 2’ நகர்ந்து வருகிறது. அதே நேரத்தில், இந்தியாவில் ரூ.300 கோடி நெட் வசூலை வெறும் 7 நாட்களில் கடந்ததன் மூலம், இந்த சாதனையை மிக வேகமாக எட்டிய தமிழ் திரைப்படமாகவும் இப்படம் மாறியுள்ளது. இதற்கு முன்பு ‘2.0’ திரைப்படம் 8 நாட்களிலும், ‘லியோ’ 11 நாட்களிலும், முதல் பாகமான ‘ஜெயிலர்’ 16 நாட்களிலும் ரூ.300 கோடி இந்திய நெட் வசூலை கடந்திருந்தன.

2023ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த் மீண்டும் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா உள்ளிட்ட முதல் பாகத்தின் நடிகர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி, சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.