ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி, சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், "நடிகர் ஜூனியர் என்டிஆர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த மனிதர்" எனப் பாராட்டியுள்ளார்.
ஆர்.ஆர்.ஆர்.
ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் யோஷிமாசா ஹயாஷியின் இந்திய சினிமா மீதான ஆர்வம், RRR படத்துக்குப் பின்னர் அதிகமாகியிருக்கிறதாம்! அந்த படத்தில் தனக்குப் பிடித்த நடிகர் ஜூனியர் என்டிஆர் என குறிப்பிட்டதில் இருந்து அவரது விருப்பம் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. ஜூனியர் என்டிஆர் இந்தியத் திரையுலகில், குறிப்பாக தெலுங்குத் திரையுலகில் சிறந்த திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
குறிப்பாக RRR படத்திற்குப் பின்னர் இந்தியாவைத் தொடர்ந்து உலகெங்கிலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில் ஜப்பான் அமைச்சரின் இந்தப் பேச்சு அவரது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
தெலுங்கு திரையுலகின் மாஸ் நாயகன் ஜூனியர் என்டிஆர் தற்போது கொரட்டாலா சிவா இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமான தேவார படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். மேலும் இப்படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானில் RRR படம் வசூல்
கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கீரவாணி இசையமைத்த இப்படத்தில் ‘நாட்டு நாட்டு’ பாடல் தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்று ட்ரெண்ட் ஆனதுடன், ஆஸ்கர் விருதையும் வென்றது.
பாடலாசிரியர் சந்திரபோஸூம், இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற நிலையில், ஆஸ்கர் விழாவில் இப்பாடலுக்கு விழா மேடையில் நடனக்கலைஞர்கள் நடனமாடினர்.
உலகெங்கிலும் வசூல்:
இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 900 கோடிகளுக்கும் மேல் இப்படம் வசூலித்தது. இந்நிலையில், ஜப்பானில் இந்தியப் படங்களுக்கு நிலவும் மார்க்கெட்டைக் குறிவைத்து இப்படத்தை ஜப்பானில் படக்குழு வெளியிட்டது. ஆர்.ஆர்.ஆர் படம் ஜப்பானில் வரலாறு காணாத வசூலைக் குவித்துள்ளது. அதாவது, ஜப்பானின் இரண்டு பில்லியன் யென்க்கு மேல் வசூலித்ததாக தகவல்கள் வெளியானது.
1995ஆம் ஆண்டு வெளியான நடிகர் ரஜினிகாந்தின் முத்து படம் தான் ஜப்பானிய மார்க்கெட்டில் அதிகம் வசூலித்த இந்தியப் படமாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதமே ஆர்.ஆர்.ஆர் படம் வெளியாகி இந்த சாதனையை முறியடித்தது. இந்நிலையில் தற்போது 2 பில்லியன் யென் வசூலித்து புதிய சாதனையை ஆர்.ஆர்.ஆர் படைத்துள்ளது. உலகம் முழுவதும் ஆர்.ஆர்.ஆர் படம் 1230 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது.