நடிகை ஜான்வி கபூர் தான் கடினமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய திரையுலகினராலும் மறக்க முடியாத பிரபலமாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அதே ஆண்டில் வெளியான தடக் படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீதேவியின் மகளாக ஜான்வி கபூர். ஸ்ரீதேவியின் மகள் என்ற அடையாளத்துடன் பல மொழி ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.
தொடர்ந்து கோஸ்ட் ஸ்டோரிஸ், ரூஹி, குட் லக் ஜெர்ரி உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் கடைசியாக மிலி என்ற படத்தில் நடித்தார். கடந்தாண்டு நவம்பர் 4 ஆம் தேதி வெளியான இப்படத்தில் சன்னி கௌஷல் மற்றும் மனோஜ் பஹ்வா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். மாத்துக்குட்டி சேவியர் இயக்கிய இப்படத்தில் ஜான்வி கபூரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்த படங்களை தொடர்ந்து அவர், நாவல், மிஸ் அண்ட் மிஸ்ஸஸ் ஜெர்ரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இதற்காகவே அவரது சமூக வலைத்தளக் கணக்கை ஏராளமானோர் பின்பற்றுகின்றனர்.
அந்த வகையில் தற்போது ஜான்வி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கடினமான உடற்பயிற்சி கருவிகளை ஆலோசகர் துணையோடு அவர் கையாளும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் “மயிலு.. பிட்னெஸ் மேல எவ்வளவு கவனமா இருக்கு” என சொல்லி ஹார்டின்களை பறக்க விட்டுள்ளனர்.