பாலிவுட் நடிகர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஜான்வி கபூர். இவர் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகர் ஸ்ரீதேவியின் மகள் என்பது திரையுலக வட்டாரத்தில் அனைவரும் அறிந்ததே. தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வரும் ஜான்வி தென்னிந்தியாவில் கவனிக்கவைத்த சில படங்களை குறி வைத்து ரீமேக் செய்து வருகிறார். தனக்கென தனி ட்ராக்கை உருவாக்கிக்கொண்டிருக்கும் ஜான்வி மலையாளப்படம் ஹெலனை கையில் எடுத்து ரீமேக் செய்தார். தற்போது நம்மூரில் நயந்தாரா கலக்கிய கோலமாவு கோகிலாவை ரீமெக் செய்து குட் லக் ஜெர்ரி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்துக்கான விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜான்வி தனக்கு வரப்போகும் கணவர் குறித்து தன் தந்தையின் எதிர்பார்ப்பு இதுதான் என கூறினார். 






நேர்காணலில் பேசிய ஜான்வி, என் கணவர் குறித்து பெரிய எதிர்பார்ப்பு எல்லாம் அவருக்கு இல்லை. ஆனால்  வரப்போகும் உன் கணவர் என்னைவிட உயரமான ஆளாக இருக்கவேண்டும் எனக் கூறுகிறார். என் அப்பாவின் உயரமே 6 அடி ஒரு இன்ச். நானும் என் தங்கையும் சிறுவயதாக இருக்கும்போது அப்பா எங்களிடம் சொல்வார். ''உங்களுக்கு திருமணமானதும் உங்கள் கணவரிடம் போய், 'நம்முடைய திருமணத்துக்கு முன்பே என் அப்பா உலகம் முழுவதும் சுற்றிக்காட்டிவிட்டார்' எனச் சொல்லுங்கள் என்பார். அதுபோலவே அவர் செய்துகாண்பித்தார். அவரைப்போலவே அன்பான ஒருவர் எங்களுக்கு எதிர்காலத்தில் கணவராக கிடைக்க வேண்டுமென அவர் விரும்புகிறார் என்றார்.


முன்னதாக தன் தந்தையுடன் நேரம் செலவழிப்பது குறித்து பேசிய ஜான்வி, தந்தை போனியுடன் சமீபத்தில் அதிக நேரம் செலவிட்டது அவர்கள் மிலி என்கிற படத்தில் இணைந்து பணியாற்றிய போதுதான் என்பதை நினைவு கூர்ந்தார். அதில், "நான் விரும்பும் அளவுக்கு குடும்பமாக ஒன்றாக அதிக நேரம் செலவிட முடியவில்லை. மேலும் மிலி படத்தின் படப்பிடிப்பின் போது தான் அப்பாவுடன் அதிக நேரம் செலவழித்தேன் என்று நினைக்கிறேன், ஏனென்றால் நாங்கள் ஒன்றாக சேர்ந்து ஆக்கப்பூர்வமாக சில யோசனைகளை செயல்படுத்தினோம். அதனால்  குடும்பத்தை ஒன்று சேர்ப்பதற்கான ஒரே வழி இப்போது ஒரு திரைப்படம் செய்வது மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அதில் நடிக்க வைப்பது மட்டுமே என்று நான் நினைக்கிறேன்." என வேடிக்கையாக கூறினார்.