திமுக சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி 181-ன் படி பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரக் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி உண்ணாநிலைப் போராட்டம் என்று பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம், தமிழக அனைத்து சிறப்பாசிரியர்கள் சங்கம், தமிழக சிறப்பாசிரியர்கள் சங்கம், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகியவை இணைந்து பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கி உள்ளன. இதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூறி உள்ளதாவது:
’’அரசுப் பள்ளிகளில் 15,169 பகுதி நேர ஆசிரியர்கள் முறையான நியமனத்தில் தமிழக மாணவர்களின் பன்முக திறன்களை மேம்படுத்தும் பொருட்டு உடற்கல்வி, கணினி, தையல், இசை, ஓவியம், தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்வியல் திறன் ஆகிய பாடப்பிரிவுகளில் ரூபாய் 12,500/- தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகிறோம்.
13 கல்வியாண்டுகளாக பணி நிரந்தரப்படுத்த கோரிக்கை
13 கல்வியாண்டுகளாக பணி நிரந்தரப்படுத்த பலமுறை கோரிக்கை மற்றும் போராட்டங்கள் வாயிலாக வலியுறுத்தியும் பணி நிரந்தரப்படுத்தப் படாமல்வாழ்வாதாரத்தை இழந்தும் சமுதாயத்தில் மதிப்பிழந்த போதிலும் அரசுப் பள்ளி மாணவர் நலன் கருதி பணியாற்றி வருகிறோம்.
எங்கள் வேதனை அறிந்த கலைஞர் கருணாநிதியைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் தேர்தல் அறிக்கையில் ( 2016 மற்றும் 2021 ) பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம்.
கடந்த காலங்களில் வாழ்வாதார பணிநிரந்தர கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர் மற்றும் கல்வி அமைச்சரின் கவனத்தை பெற கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டம் மற்றும் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உயர் அதிகாரிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றும், நிதித்துறை ஒப்புதல் இல்லை என்பதும் 12,000-க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர் குடும்ப வாழ்வாதாரம் காக்கும் கோரிக்கை நிறைவேறாமல் உள்ளதும் எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
செப். 12 எழும்பூரில் உண்ணாரவிரதப் போராட்டம்
எனவே எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ராஜ ரத்தினம் மைதானம் அருகில் பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கையை வழியுறுத்தி செப்டம்பர் 12-09-2024 வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் 12,200/- பகுதிநேர ஆசிரியர் குடும்பங்களுடன் உண்ணாநிலை போராட்டம் நடத்த உள்ளோம். இதனால் முதல்வர் மற்றும் கல்வி அமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்’’.
இவ்வாறு பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.