காந்தி, அம்பேத்கர் மற்றும் சாதி பாகுபாடு பற்றி நேர்காணல் ஒன்றில் நடிகை ஜான்வி கபூர் பேசியுள்ளது சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 


ஷரன் ஷர்மா இயக்கத்தில் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் தர்மா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் “மிஸ் அண்ட் மிஸஸ் மஹி”. இப்படத்தில் ராஜ்குமார் ராவ் மற்றும் ஜான்வி கபூர் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் மே 31 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் ஜான்வி கபூர் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான இவர் சினிமாவின் தனக்கென தனியிடம் பிடிக்க போராடி வருகிறார். அதனை மிஸ் அண்ட் மிஸஸ் மஹி படம் தீர்த்து வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதனிடையே சமீபத்திய நேர்காணலில் காந்தி, அம்பேத்கர் மற்றும் சாதி பாகுபாடு பற்றி ஜான்வி கபூர் பேசினார். அதில், ‘அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே நடக்கும் விவாதத்தைப் பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இருவரும் இந்திய சமூகத்தை வடிவமைத்ததில் முக்கிய பங்கு கொண்டிருக்கிறார்கள். அவர் சமூக மாற்றத்தில் எதற்காக நிற்கிறார்கள், ஒரு குறிப்பிட்ட தலைப்பில் அவர்களின் பார்வைகள், எண்ணங்கள் காலப்போக்கில் எவ்வாறு மாற்றம் அடைந்தது என்பது பற்றிய விவாதம் சுவாரஸ்யமானதாக இருக்கும். 






அம்பேத்கர் ஆரம்பத்திலிருந்தே தனது நிலைப்பாடு என்ன என்பதை மிகக் கடுமையாகவும் தெளிவாகவும் தெரிவித்தார். நம் சமூகத்தில் பரவி வரும் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை அவர் மேலும் மேலும் வெளிப்படுத்தியதால் காந்தியின் பார்வை மாறிக்கொண்டே வந்தது என நினைக்கிறேன். மூன்றாம் நபரின் கண்ணோட்டத்தில் இருந்து இதைப் பற்றி மேலும் அறிந்துகொள்வது மற்றும்  சகித்துக்கொள்வது என்பது மிகவும் வித்தியாசப்படும்” என கூறியுள்ளார். ஜான்வி கபூரின் இந்த பேச்சுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். 


தொடர்ந்து பேசிய அவர், “நான் மிஸ் அண்ட் மிஸஸ் மஹி படத்தில் நடிக்க விரும்பும்போது எடையை குறைப்பதோடு மட்டுமல்லாமல் கிரிக்கெட் பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும் என இயக்குநர் தெரிவித்தார். நான் சமீபத்தில் கொல்கத்தா அணி வீரர்களுடன் வலைப்பயிற்சி மேற்கொண்டேன். கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்ள பாந்த்ராவில் உள்ள மைதானத்தில் தினமும் பல மணி நேரம் பயிற்சி செய்தேன்” என ஜான்வி கூறினார்.