காவிரி நீர் பங்கீட்டு விவகாரம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அதன் தாக்கம் தற்போது சினிமாவையும் எட்டியுள்ளது. தமிழக முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படமாகக் கூறப்படும் 'ஜன நாயகன்' படத்தின் திரையிடல், கர்நாடகாவின் பல பகுதிகளில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Continues below advertisement

ஜனநாயகன் போஸ்டரை கிழித்து எதிர்ப்பு

காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் மற்றும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு திரையரங்குகளில் நிறுத்தப்பட்டிருந்த ஜனநாயகன் படத்தின் பேனர்களை போராட்டக்காரர்கள் அகற்றியது பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திரையரங்குகள் பாதுகாப்பு காரணங்களால் 'ஜன நாயகன்' திரைப்படத்தின் காட்சிகளை ரத்து செய்துள்ளன. மேலும் சில திரையரங்குகள் ஜனநாயகன் படத்தின் போஸ்டர்களை வேறு படங்களின் பொஸ்டர்களை கொண்டு மறைத்துள்ளார்கள். 

முதல்வர் விஜய் கர்நாடகா செல்ல மறுப்பு 

இந்த பரபரப்பான சூழலில், தமிழக முதலமைச்சர் விஜய் ஆகஸ்ட் 3-ஆம் தேதி பெங்களூருவுக்கு வந்து காவிரி விவகாரம் குறித்து நேரடி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போதைய பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, "இப்போது கர்நாடகாவுக்கு வர வேண்டாம்; சூழ்நிலை சீரான பிறகு சந்தித்து பேசலாம்" என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் விஜய்க்கு அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு மாநிலங்களுக்கும் இடையிலான பதற்றம் தணிந்த பிறகே சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Continues below advertisement

இதற்கிடையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடகா, தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி (cusecs) தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவை மீண்டும் உறுதி செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் மாநிலம் முழுவதும் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

எச். வினோத் இயக்கியுள்ள ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தணிக்கை, நீதிமன்ற வழக்கு, இணைய கசிவு போன்ற பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி வெளியான இந்தப் படம், தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் தற்போது காவிரி நீர் பிரச்சினை காரணமாக கர்நாடகாவில் படத்தின் திரையிடல் பாதிக்கப்பட்டுள்ளது.