பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன், தான் வந்த விமானம் தரையிறங்குவதில் விபத்தை சந்தித்ததாக கூறி பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறார். 

 

அவர் பதிவிட்டு இருக்கும் அந்தப்பதிவில், “இன்று (ஏப்ரல் 28) காலை திருச்சியிலிருந்து சென்னைக்கு 11.20-க்குக் கிளம்பிய Indigo Airlines 12.15 போல சென்னையை வந்தடைந்திருக்க வேண்டும். ஆனால் 1.30-க்குதான் தரையிறங்கியது. 'தரை இறங்கியது' என்று சொல்வது சம்பிரதாயம். தரையில் விழுந்தது என்பது நிஜம். ஒருமுறையல்ல.. இருமுறை. குழப்பமாக இருக்கிறதா?

 

12.05 போல வெளியே எட்டிப்பார்த்தேன். கடல் பரப்புதான் தெரிந்தது. சென்னை வந்தாகிவிட்டது, இறங்குவதற்கான சமிக்ஞ கிடைக்கவில்லை என்பதை விளங்கிக் கொண்டேன். அரைமணி நேரம் பெருங்கடல் மேலே சுற்றிக்காண்பித்தார்கள். 12.33-க்கு இறங்கப்போவதாக சொன்னார் அந்த Video Game Player.. அதாவது இந்த விமானத்தின் Captain.

 



 

 

கொஞ்சம் கொஞ்சமாக வேகமும் உயரமும் குறைக்கப்பட்டு விமானதளத்தை நோக்கிப் பறந்தோம். உயரம் இன்னும் குறையத் தொடங்கியது, ஆனால் அதற்கு இணையாக குறைந்திருக்க வேண்டிய வேகம் குறையவில்லை என்பது என் கணிப்பு. கொஞ்சம் வேகமாகவே சென்றுகொண்டிருந்தோம். விமானம் இப்படியும் அப்படியும் ஆடுகிறது. கொஞ்சம் அச்சத்தைக் கொடுக்கும் விதமாகவே அசைந்து அசைந்து சென்றது. விமானத்தை செலுத்துகிற அந்த நுகம் (Yoke) கேப்டனின் கட்டுக்குள் இல்லை என்பதை உணர்ந்தேன்.

 



விமானதளத்துக்குள் நுழைந்தோம். தரையை நெருங்கினோம். திடீரென விமானம் தரையில் 'தொம்'மென்று விழுந்தது. எல்லாருக்கும் தூக்கிவாரிப் போட்டது. சில சன்னமான அலறல்கள், வசைகள் - பல மொழிகளில். ஓடுதளத்தில் கொஞ்சதூரம் ஓடியது. திட்டிக்கொண்டே பலரும் பெல்ட்டுகளைக் கழட்டும் சத்தம் கேட்டது.



 

மறுபடியும் ஒரு சிறு சலசலப்பு. என்னவென்று வெளியே எட்டிப்பார்த்தால் விமானம் சமமாக இல்லாமல் சற்று மேல் நோக்கிய வண்ணம் ஒரு கோணத்தில் நகர்ந்துகொண்டிருந்தது. கொஞ்சம் சுதாரித்துப் பார்த்தால் மறுபடியும் மேலெழுந்து பறக்கத் தொடங்குகிறது என்பதை உணர்ந்தோம். அச்சத்துடன் பலவிதக் குரல்கள்.

 

 



சாதாரண இறைநம்பிக்கைகள் எல்லாம் தீவிர பக்திக்குள்ளானதை பலர் உதட்டசைவில் பார்க்கமுடிந்தது. ஒரு வயதான தாயின் சத்தமான கூக்குரலும், 13-வயது பேத்தி அவரை சாந்தப்படுத்த முயல்வதும் துணிவாக இருப்பதாகக் காட்டிக்கொண்ட சில ஆண்களையே அசைத்ததையும் பார்த்தேன். அந்த அம்மாவுக்கு அழுகை அதிகமாகி மூச்சுத்திணறல் ஏற்பட்டது, பலருக்கும் பதற்றத்தை ஏற்படுத்தியது. மறுபடியும் வங்காள விரிகுடா சுற்றுலா - கூடுதல் கட்டணமின்றி. இந்த முறை 35 நிமிடங்கள்.

 

 



1.35-க்கு இரண்டாவது தரையிறங்கல். இந்த முறை அந்த Video Game Player கொஞ்சம் கற்றுக்கொண்டார் போல. வேகம் கொஞ்சம் குறைக்கப்பட்டது. 'தொம்'மென்று விழாமல் 'டம்'மென்று விழுந்தது. என் வரிசையில் அந்த ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து எல்லாவற்றையும் வேடிக்கப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு 5 -வயது பையனுக்கு (அந்தப் பாட்டியின் பேரன்) பயங்கர த்ரில். வீடியோ கேம் பருவம்தானே! அந்த கேப்டனுக்கும் இதே வயதுதான் இருக்கும் என நினைக்கிறேன்." என்று அவர் பதிவிட்டு இருக்கிறார். 

 

தமிழில்  ‘சுப்ரமணியபுரம்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான  ‘ஜேம்ஸ் வசந்தன்’ தொடர்ந்து  ‘நாணயம்’ ‘ பசங்க’  ‘ஈசன்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.