தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான இயக்குநர் பாலாவின் உதவி இயக்குனராக பணிபுரிந்து தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். சுப்ரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் முதல் படத்திலேயே மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர். அடுத்ததாக அவரின் வித்தியாசமான இயக்கத்தில் உருவான படம் ஈசன். இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த பிறகு இயக்குநர் சசிகுமாரின் கவனம் நடிப்பின் மீது திரும்ப படங்களில் ஹீரோவாக நடிக்க துவங்கினார். 


 



இயக்குநர் டு நடிகர் சசிகுமார் :


ஏராளமான திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த சசிகுமாரின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் அயோத்தி. இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார் மந்திரமூர்த்தி. ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி திரை பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் சில சர்ச்சைகளில் சிக்கியது. படத்தின் கதை என்னுடையது என ஒருவர் மாற்றி ஒருவர் சர்ச்சையை கிளப்பி வந்தனர். இருப்பினும் இயக்குநர் மந்திரமூர்த்தி இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த வண்ணம் உள்ளார். இப்படி கதைக்கு சொந்தம் கொண்டாடி பங்கு கேட்கும் விதமாக ஒரு புறம் சர்ச்சைகள் கிளம்பி வரும் நிலையில் மேலும் புதிதாக ஒரு பரபரப்பான தகவல் ஒன்று அயோத்தி திரைப்படம் குறித்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.  



ஜேம்ஸ் வசந்தன் வாழ்த்து :


பலரும் அயோத்தி திரைப்படத்துக்கு வாழ்த்துக்களை சோசியல் மீடியா மூலம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அயோத்தி திரைப்படம் குறித்து தனது முகநூல் பக்கம் மூலம் போஸ்டை பதிவிட்டுள்ளார். 


அயோத்தி திரைப்படம் பார்த்துவிட்டீர்களா? அப்படி இல்லை என்றால் உடனே பார்த்துவிடுங்கள்...


எத்தனையோ மோசமான திரைப்படங்களை பார்த்து நமது நேரத்தை வீணடிக்கிறோம். அப்படி இருக்கையில் நமது நேரத்தை உருப்படியான ஒரு படத்தை பார்ப்பதன் மூலம் செலவழிக்கலாம். பலரும் மலையாள திரைப்படங்களை போற்றுவதை கேள்விப்பட்டு இருப்போம். மலையாள திரைப்படங்களின் திரைக்கதை வித்தியாசமாக இருக்கும் என கூறுவதுண்டு. அதற்கு இணையாக வெளியாகியுள்ள ஒரு தமிழ் திரைப்படம் தான் அயோத்தி. 


மிகுந்த எதிர்பார்ப்புடன் இல்லாமல் மிகவும் எளிமையாக, உணர்வுபூர்வமான ஒரு கதையை தேவையில்லாத மசாலாக்களை சேர்க்காமல் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். இப்படம் எப்படி என்பதை பற்றி யாரிடம் கேட்டு தெரிந்து கொள்ளாமல் நேரடியாக போய் பாருங்கள். 


சில காட்சிகளில் நம்மை அறியாமல் நம் கண்களில் இருந்து கண்ணீர் வந்துவிடும். அந்த சமயத்தில் எதைப்பற்றியும் யோசிக்காமல் அழுது விடுங்கள். அது உங்களுக்குள் இருக்கும் மனிதத்தை வெளிப்படுத்துகிறது. அழுகை, உணர்வு என்றதும் இது ஒரு சோக திரைப்படம் என்று நினைக்க தேவையில்லை. ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டிய திரைப்படம்' என தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார். 


 



ஜேம்ஸ் வசந்தன் கொடுத்த பதிலடி :


ஜேம்ஸ் வசந்தனின் இந்த போஸ்டுக்கு கமெண்ட் செய்த ஒரு ரசிகர் சரியான பதிலடியை பெற்று கொண்டார். 'அயோத்தி படத்தின் இந்த விளம்பரத்திற்கு எவ்வளவு பணம்' என கமெண்ட் செய்ததற்கு ஜேம்ஸ் வசந்தன் ' நீ சேர்ந்திருக்கும் இடம் அப்படி. ஒற்றுமையை பற்றி பேசினால் எரியுமே' என பதிலடி கொடுத்து இருந்தார். ஜேம்ஸ் வசந்தன் கொடுத்த இந்த தகுந்த பதிலடி சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 


சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் மற்றும் ஈசன் ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கும் இசையமைத்தவர் ஜேம்ஸ் வசந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.